சரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்

SIB REVIEW

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்கிற காமெடி ஹிட் படத்தை இயக்கிய எழிலின் டைரக்சனில் உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது.. முந்தைய வெற்றி கொடுத்த எதிர்பார்ப்பை இதிலும் நிறைவேற்றியுள்ளார்களா..? பார்க்கலாம்.

வழக்கம் போல படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றுகிறார் உதயநிதி.. அவரது மாமன் சூரி ஒரு வட இந்திய கட்சியின் தமிழக தலைவராக முயற்சிக்க, சூரியை தந்திரமாக துபாய்க்கு ஓட்டகம் மேய்க்க அனுப்பிவிட்டு இங்கே கட்சிப்பதவியை கைப்பற்றுகிறார் உதயநிதி. காலியாக கிடக்கும், தனது அப்பாவின் நண்பரும் சூரியின் அண்ணனுமான லிவிங்ஸ்டனின் வீட்டை கட்சி ஆபீசுக்கு பயன்படுத்துகிறார்..

பல வருடங்களுக்கு பிறகு லிவிங்ஸ்டன் ஊர் திரும்புகிறார்.. சிறுவயதில் உதயநிதியுடன் எப்போதும் சண்டக்கோழியாக மல்லுக்கு நிற்கும் அவரது மகள் பருவப்பெண் ரெஜினாவாக வந்து நிற்கிறார் இன்னும் அதே வீராப்புடன். பக்கத்து ஊர் மிராசுதார் மன்சூர் அலிகான் தனது மகன் சாம்ஸுக்கு ரெஜினாவை பெண் கேட்டு நிச்சயமும் பண்ணிவிடுகிறார்.. அப்போதுதான் ரெஜினாவின் மீது காதல் அரும்ப ஆரம்பித்த நிலையில் உதயநிதி தவிக்க, ரெஜினா அவர் மீதுள்ள பழைய கோபத்தில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

இந்த திருமணத்தை நடைபெறவிடாமல் தடுக்க, உதயநிதிக்கு அவரது இறந்துபோன தோழி சிருஷ்டியின் ஆவி உதவுகிறது.. ஆனால் உதயநிதி மீதுள்ள கோபத்தில் அவரது திட்டங்களை உடைத்து, ரெஜினாவை மன்சூர் அலிகானின் மகனுக்கு கட்டிவைக்க முழு மூச்சாக இறங்குகிறார் சூரி..

பஞ்சாயத்து, அடிதடி (எல்லாமே காமெடிதான்) என சில கட்ட போராட்டம் நடக்க, உண்மையிலேயே உதயநிதி மீது காதல் இல்லாத ரெஜினாவுக்கு யாருடன் திருமணம் நடந்தது என்பது க்ளைமாக்ஸ்.. இதை இரண்டுமணி நேரம் தனது பாணியில் காமெடியாக தர முயற்சித்துள்ளார் இயக்குனர் எழில்.

உதயநிதி தலையில் ஹெவி வெயிட்டாக எல்லாம் இல்லாமல் ரொம்பவே சிம்பிளான சுமையை ஏற்றியுள்ளார் எழில்.. அதனால் அந்த கேரக்டருக்கு உதயநிதி முழுக்க முழுக்க ஓகே தான். ஒரு பக்கம் சூரி, இன்னொரு பக்கம் யோகிபாபு இருவரும் உடனிருக்கும் தைரியத்தில் காமெடியிலும் ஸ்கோர் பண்ணுகிறார்.

சண்டக்கோழி கேரக்டரில் ரெஜினாவின் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன.. கொஞ்ச நேரமே வந்தாலும் சிருஷ்டி டாங்கே மனதில் நிறைகிறார்.. ஆனால் பேயாக வந்து கண்டிசன்ஸ் அப்ளை ரீதியில் உதயநிதிக்கு ஹெல்ப் பண்ணுவதெல்லாம் சரியான போங்கு ஆட்டம் சார்..

வித்தியாசமான கெட்டப்பில் சூரி.. இந்தமுறை ஹீரோவுக்கு எதிராளாக அவரை மாற்றியிருந்தாலும் அவர் ஏரியாவில் அவர் புகுந்து விளையாடவெ செய்கிறார்.. ஆனால் ஒரு சில காமெடிகளை தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை என்பது பலவீனம்.. யோகிபாபு பாடிலாங்குவேஜ் ஓகே.. ஒன்லைனர் பஞ்ச்கள் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகின்றன..

ரோபோ சங்கர், ரவி மரியா, லிவிங்ஸ்டன், சாம்ஸ், மன்சூர் அலிகான், மனோபாலா, மதுமிதா என ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளம் இருந்தாலும் எல்லோருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினி முருகன் பாணியில் ஊர் பஞ்சாயத்தை ரெடி பண்ணி அதை காமெடி அந்தாக்சிரியாக மாற்றியது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.. கடைசி வரை ரெஜினாவின் காதல் இல்லாமலேயே படம் நகர்வதால் காதல் காட்சிகள் மனதில். ஒட்ட மறுக்கிறது..

இமானின் இசையில் ‘எம்புட்டு இருக்குது ஆச’ பாடல் கேட்க கேட்க சுகம். எல்லாவற்றையும் காமெடியாகவே லைட்டாக ஹேண்டில் செய்திருக்கும் இயக்குனர் எழில், கதை உருவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் திரும்பவும் தியேட்டருக்கு வரவைக்கும் படமாக அமைந்திருக்கும்.

அதனால் என்ன..? இரண்டுமணி நேரம் காமெடியாக பொழுதுபோக்க ஏற்ற படம் தான் இந்த ‘சரவணன் இருக்க பயமேன்’.