ஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..? சால்ட்டா..?

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக காமெடி சேட்டை செய்தவர் தான் சந்தானம். இப்போது அவரையே ஹீரோவாக வைத்து ஆர்.கண்ணன் இயக்கியுள்ள பிஸ்கோத் படம் சால்ட் பிஸ்கட்டா..? இல்லை ஸ்வீட் பிஸ்கட்டாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள் இருக்கிறது. அதில் ஒன்று ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் போல வேடம் அணிந்து இருப்பார். அந்த வேடத்தில் அந்த கால பாணியில் ஒரு சண்டைக்காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.

தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடிக்க ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் கார்த்தியின் தம்பி படத்தில் பாட்டியாக கலக்கிய ‘சௌகார்’ ஜானகி இதில் சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.