“நானும் சந்தானமும் ஏரியா பிரிச்சுக்கிட்டோம்” ; விவேக்..!

விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’.. சந்தானத்துடன் லொள்ளுசபா காலத்திலிருந்தே நண்பனாக இருக்கும் சேதுராமன் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். விபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்க, லட்டு தின்ன ஆசையா சேது, பவர் ஸ்டார், மயில்சாமி, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்..

இதைவிட ஸ்பெஷல் நியூஸ் என்னவென்றால் இந்தப்படத்தில் படம் முழும் வரும் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் விவேக் நடித்துள்ளார். காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய சந்தானத்துடன், சீனியர் காமெடி நடிகரான விவேக்கிற்கு எப்படி செட் ஆனது என்பதை இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விவேக்கே கூறியுள்ளார்.

“இரண்டு பெரிய காமெடி நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சரியாக வருமா என நானும் ஆரம்பத்தில் தயங்கினேன்.. ஆனால் விடிவியும் சந்தானமும் தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல சந்தானம் ஹீரோ என்பதால் அவர் காமெடி மட்டுமே பண்ணிக்கொண்டு இருக்க முடியாது. சண்டை, காதல், டூயட் என எல்லா ஏரியாவிலும் சுற்ற வேண்டியிருக்கும். அதனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார்கள்.. சந்தானமும் நானும் இதில் ஏரியா பிரித்துக்கொண்டோம்.. அதனால் எந்த சிக்கலும் இல்லை. நகைச்சுவை காட்சிகளும் வெகு சிறப்பாக வந்துள்ளன” என கூறியுள்ளார் விவேக்.