சங்கத்தமிழன் – விமர்சனம்

சினிமாவில் காமெடியனாக வாய்ப்பு பெற நண்பர் சூரியுடன் முயற்சி செய்கிறார் விஜய்சேதுபதி. இடையில் மும்பை தொழிலதிபர் வீட்டுப் பெண்ணான ராஷி கண்ணாவுடன் காதல் ஏற்படுகிறது.. இதனால் கோபமாக கிளம்பிவரும் ராஷி கண்ணன் தந்தை ரவி கிஷன் விஜய் சேதுபதியை பார்த்து அதிர்ச்சியாகிறார்.. காரணம் தமிழகத்தின் தென் மாவட்டமான தேனியில் ஒரு காப்பர் கம்பெனி ஆரம்பிக்க முயற்சிக்கும் ரவி கிஷணுக்கு அந்தப்பகுதி எம்எல்ஏவான அசுதோஷ் ராணா உதவி செய்ய முயற்சிக்கிறார் ஆனால் அந்த பகுதியில் செல்வாக்குமிக்க நாசரும் அவரது மகன் விஜய்சேதுபதியும் அதை எதிர்க்கிறார்கள்.

ஒருகட்டத்தில் நாசர், விஜய்சேதுபதி உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொல்கிறார் அசுதோஷ் ராணா.. இந்த நிலையில் இறந்துபோன விஜய்சேதுபதி போலவே தனது மகள் ராஷி கண்ணா காதலிக்கும் நபரும் இருப்பதால் அவருக்கு தனது மகளை திருமணம் செய்து தருவதாகவும் மிகப்பெரிய அளவில் பணமும் தருவதாக கூறி எப்படியாவது தேனிக்கு சென்று தனது பேக்டரியை அங்கேயே நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அனுப்பி வைக்கிறார்.

இறந்து போனதாக தங்கள் நினைத்த விஜய்சேதுபதி உயிருடன் திரும்பி வந்தது கண்டு அதிர்ச்சியடையும் அசுதோஷ் ராணா அவர் நிஜமான விஜய்சேதுபதி அல்ல என்பதை தெரிந்துகொண்டு அவரையும் அப்புறப்படுத்த நினைக்கிறார்.. ஆனால் நிஜமாகவே விஜய்சேதுபதி அந்த காப்பர் கட்சிக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கும்போது, இப்போது ரவி கிஷணும் அசுதோஷ் ராணாவுடன் சேர்ந்து இவரையும் அழிக்க நினைக்கிறார்கள்.. ரவி கிஷணிடம் பணம் வாங்கிக் கொண்டு காரியத்தை முடிக்காமல் விஜய் சேதுபதி ஏன் மனம் மாறினார்..? உண்மையில் கிராமத்திலிருந்த விஜய்சேதுபதிக்கு என்ன ஆனது என்பதற்கெல்லாம் ஒரு ட்விஸ்ட்டுடன் கிளைமாக்ஸ் விடை செல்கிறது..

இந்த கதையை படிக்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்து பழகிய கதைதான் என்பது.. அதை விஜய்சேதுபதியை வைத்து இன்று இருக்கும் எந்தவித லேட்டஸ்ட் டெக்னாலஜியையும் பயன்படுத்தாமல் அப்படியே ராவாக எடுத்திருக்கிறார்கள்.. விஜய்சேதுபதிக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருப்பது அவர் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகளுக்கும் அவரது வித்தியாசமான நடிப்பிற்கும் தான்.. ஆனால் இந்தப்படத்தில் அவர் ஏற்று இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களிலுமே கமர்சியல் அம்சங்கள், பில்டப் என அவரை வழக்கமான ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே காட்டவே. முயற்சித்திருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அப்படி இரண்டு விஜய்சேதுபதிகளையும் ஒப்பீடு செய்தால் கிராமத்து விஜய் சேதுபதிதான் தராசுத் தட்டில் கீழே இழுக்கிறார். விஜய்சேதுபதியின் உடல்வாகை கணக்கிட்டு சண்டைக்காட்சிகளில் கட்டைகளையும் இரும்புக் கம்பிகளையும் கொடுத்து சமயோசிதமாக சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்

ராஷி கன்னா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு கதாநாயகிகள்.. கிராமத்து துறுதுறு நிவேதா, கோடீஸ்வர வீட்டு பெண்ணான ராஷி கண்னா இருவருமே கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.. அசுதோஷ் ராணாவின் வில்லத்தனத்தை ஏற்கனவே நாம் பார்த்திருப்பதால் அதில் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.. பாலிவுட், போஜ்புரி படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ரவி கிஷண் ஹைடெக் வில்லத்தனம் வழக்கம்போல..

படத்தில் சூரி இருந்தும் காமெடிக்கு நிறைய பற்றாக்குறை நிலவுகிறது.. குறிப்பாக விஜய்சேதுபதி, சூரி இருவரும் சார் சார் என ஒருவரை ஒருவரை கூப்பிட்டு கொள்வது ஒரு கட்டத்தில் நமக்கு அலுப்பையே தருகிறது.. நாசர், மாரி வினோத், ஸ்ரீமன், மாரிமுத்து என படம் நெடுக ஒரே நட்சத்திரப் பட்டாளம் தான்.

கிராமத்தின் வாழ்வாதாரத்தை அழிக்கும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்திற்குள் வரக்கூடாது என ஏற்கனவே சில படங்கள் வந்துவிட்ட நிலையில், இந்த சங்கத்தமிழன் மூலம் இயக்குனர் விஜய்சந்தர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதாவது புதிதாக செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்த வகையில் விஜய்சேதுபதிக்கு இந்தப் படம் இன்னொரு ‘றெக்க’ – அவ்வளவுதான்