சலீம் – விமர்சனம்

 

‘நான்’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகி இருக்கிறது சலீம். சென்னையின் நவீன மருத்துவமனை ஒன்றில் பணிபுரிகிறார் டாக்டர் சலீம். ஒரு பக்கம் அவருக்கு நிச்சயித்த பெண்ணுடன், அந்த பெண்ணின் விருப்பப்படி அவரால் நடந்துகொள்ள முடியவில்லை. அதனால் அந்தப்பெண் பத்திரிக்கை அடித்ததோடு திருமணத்தை நிறுத்திவிடுகிறாள்.

இன்னொரு பக்கம் தான் வரும் வழியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வந்து காப்பற்ற முயற்சிக்க, மருத்துவமனை நிர்வாகம் அதை எதிர்த்து அவரை வேலையைவிட்டு தூக்குகிறது. ஒரு சாதாரண மனிதனாக, நேர்மையானவனாக வாழ முடியாத சூழ்நிலையை உணர்ந்த சலீம் அடுத்ததாக அதிரடியில் இறங்குகிறார்..

சம்பந்தப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரி மகன் மற்றும் அவரது நண்பர்களை கடத்தி ஒரு ஹோட்டல் அறையில் சிறைவைக்கிறார் சலீம்..  நகரின் மொத்த போலீசும் மீடியாவும் அங்கே குவிய, மந்திரியை அவர் வாயாலேயே குற்றத்தை ஒத்துக்கொள்ள சொல்கிறார் சலீம்.. மந்திரி ஒப்புக்கொண்டாரா..? அல்லது சலீம் போலீசில் சிக்கினாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்..

‘சலீம்’ஆக விஜய் ஆண்டனி.. 90% சதவீதம் சீரியஸ்.. 10% புன்னகை என வசீகரிக்கிறார். இடைவேளைக்கு முன் சாந்தசொரூபி.. இடைவேளைக்குப்பின் ருத்ரமூர்த்தி என, தனக்கு எது நன்றாக வரும் என்பதை உணர்ந்து அந்த ஏரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். அக்ஸா பர்தாசானி.. இன்றைய இளம்பெண்ணாக தனது கோணத்தில் முன்கோபத்தால் அவர் நடந்துகொள்ளும் விதம் அவரது நடிப்பை சபாஷ் சொல்ல வைக்கின்றன.

அரசியல்வாதியாக வரும் ஆர்.என்.ஆர் மனோகர், மிரட்டல் இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ், விஜய் ஆண்டனியின் நண்பனாக வரும் சாமிநாதன், காவல்துறை புலனாய்வு அதிகாரி என மற்ற நால்வரும் படத்திற்கு முக்கிய தூண்கள்.. இடைவேளைக்குப்பின் ஹோட்டல் அறையிலேயே வைத்து போரடிக்காமல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் நிர்மல் குமார்.

அதற்கு விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும் கைகொடுத்திருக்கின்றன. தவிர மூன்று பாடல்கள் முத்தான ரகம். அதிரடிப்படை வீரர்களால் எதுவும் செய்யமுடியவில்லை என்பது தான் லாஜிக்காக இடிக்கிறது. மற்றபடி சலீமின் வேட்டை இன்னும் தொடர்வதாக மூன்றாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது படம்..

ரிசல்ட் : தாராளமா சலீமுக்கு டிக்கெட் புக் பண்ணுங்க..