சக்க போடு போடு ராஜா – விமர்சனம்

sakka podu podu raja movie review

வசதியான வீட்டுப்பிள்ளை சந்தானம்.. நண்பன் சேதுவின் காதலை சேர்த்துவைக்க, தாதா சம்பத்தின் முதல் தங்கையை கடத்திவந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். இதனால் இரண்டாவது தங்கை வைபவியை, பெங்களூரில் உள்ள தம்பியின் வீட்டில் தங்கவைத்து விட்டு, சந்தானத்தை கொலைவெறியுடன் தேடுகிறார் சம்பத். இதையறிந்து தலைமறைவாக இருக்க பெங்களூருக்கு போகும் சந்தானத்திற்கு அங்கே இருக்கும் வைபவியுடன் காதல் ஏற்படுகிறது.

தனது இன்னொரு தங்கையும் காதலில் விழுந்துவிட்டாள் என அறிந்த சம்பத், வைபவியை அழைத்துக்கொண்டு சென்னை வந்து, முதல் தங்கைக்கு பேசிவைத்திருந்த அதே மாப்பிள்ளையுடன் திருமணம் நடத்தும் ஏற்பாடுகளில் இறங்குகிறார். வாஸ்து ஜோசியர் மயில்சாமி மூலமாக வேறு வீட்டிற்கு சம்பத் மாறவேண்டும் என்கிற ஐடியாவை சொல்லவைத்து, தங்கள் வீட்டிற்கு அவர்களை வாடகைக்கு வரவைக்கிறார் சந்தானம்.

தனது முதல் தங்கையின் காதலுக்கு உதவியதும் தற்போது இன்னொரு தங்கையை காதலிப்பதும் சந்தானம் தான் என தெரியாமலும், நேரில் அவருடன் நட்பாக பழகிக்கொண்டு, இன்னொரு பக்கம் கோபத்துடன் அவரை தேடிக்கொண்டும் இருக்கிறார் சம்பத். சந்தானம் பற்றி துப்பு கண்டுபிடிக்க அவரது தந்தை விடிவி கணேஷையும், பெங்களூரில் உதவி செய்த டாக்சி ட்ரைவர் விவேக்கையும் அதே வீட்டில் கொண்டு வந்து அடைக்கிறார் சம்பத்,

இன்னொரு பக்கம் சம்பத்தின் மீதுள்ள முன் பகை காரணமாக, அவரது தங்கைகளை போட்டுத்தள்ள ஆட்களுடன் அலைகிறார் சம்பத்தின் எதிரியான சரத் லோகித்தஸ்வா. சம்பத்தை சாப்ட்டாக டீல் பண்ணி, சரத் லோகித்தஸ்வாவிடம் அதிரடி ஆட்டம் காட்டி, சந்தானம் தனது காதலியை எப்படி காப்பாற்றி கைபிடிக்கிறார் என்பதுதான் மீதிப்படம்.

நண்பனின் காதலை சேர்த்து வைப்பது, அதற்கான ஆள் மாறாட்டம் என மொத்தக்கதையையும் தனக்கு தோதாக வளைத்துக்கொண்டுள்ளார் சந்தானம். போதாக்குறைக்கு கால்மணிக்கொருமுறை ஒரு பாட்டு, ஒரு பைட்டு என தெலுங்கு ஹீரோ ரேஞ்சுக்கு ஒன் பிளஸ் ஒன் பேக்கேஜில் அதிரடிக்கிறார். நடனத்திலும் சண்டைகாட்சிகளிலும் நெளிவு சுளிவுடன் கைதேர்ந்தவர் போல லாவகம் காட்டுகிறார்.

மெழுகு பொம்மை போல கொழுக் மொழுக்கென வந்து செல்லும் வைபவி சாண்டில்யா, அடுத்த படத்தில் தனது முழு நடிப்புத்திறமையையும் காட்டுவார் என நம்பலாம். காமெடியில் சந்தானம் அளந்து வாசிப்பதால் அந்த ஒரு இடத்தை நிரப்ப விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், மயில்சாமி, பவர்ஸ்டார் என ஐந்து பேர் மாறி மாறி டூட்டி பார்த்திருக்கிறார்கள். அதில் விடிவி கணேஷ் விவேக்கின் மனைவி ஆள் மாறாட்ட காமெடி ரசிக்க வைக்கிறது. அதேசமயம் விவேக், சந்தானம் பற்றிய உண்மையை சம்பத்திடம் சொல்ல வரும் காட்சிகள் எல்லாம் ‘உத்தமபுத்திரன்’ தனுஷ்-மயில்சாமி காமெடியின் அப்பட்டமான காப்பி.

சம்பத்திற்கு இதில் பாசக்கார அண்ணன் வேடம். மாடுலேஷன் மாறாவிட்டாலும் கூட, கோபமும் பாந்தமும் ஆக நடிப்பில் மாற்றம் காட்டியுள்ளார். வில்லனாக சரத் லோகித்தஸ்வா.. இவர் சம்பத்தின் தங்கைகளை கொல்ல துடிப்பதற்கான காரணம் இருக்கிறதே அட அடா..

சிம்பு இந்தப்படத்திற்கு இசையமைத்திருப்பது முக்கியமான ஹைலைட் என சொல்ல ஆசைதான்.. ஆனால் வீணாக பொய் பேசவேண்டாமே.. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதையோ, கருத்து சொல்லும் கதையோ அல்ல. சந்தானத்திற்கு இது ஹிட்டாக அமையும் என்று கூட சொல்ல முடியாது. ஆனால் வந்தோமா, சிரித்தோமா என ஜஸ்ட் லைக் தட் பொழுதுபோக்கிற்கு ஏற்ற ஜாலியான படமாகத்தான் இந்த ‘சக்க போடு போடு ராஜா’வை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் சேதுராமன்..