சைவம் – விமர்சனம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இருக்கும் பெரியவர் நாசருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு பெண். ஒரு மகன் மட்டும் கிராமத்தில் இருக்க மற்றவர்கள் சென்னையிலும் வெளிநாட்டிலும்… மூன்று வருடம் கழித்து கோவில் விஷேசத்திற்காக ஒன்று கூடுகின்றனர்.
அனைவரும் கோவிலுக்கு செல்லும்போது அங்கே பேத்தி சாராவின் துணியில் தீப்பிடிக்க, கோவில் பூசாரி நாசரிடம் ஏதோ வேண்டுதலை நிறைவேற்றாமல் இருக்கிறீர்கள்.. அதை உடனே நிறைவேற்றினால் பிரச்சனைகள் நீங்கும் என்று சொல்கிறார்.

அப்போதுதான் நாசருக்கு தங்களை ஒருமுறை விபத்திலிருந்து காப்பாற்றியதற்காக சாமிக்கு படைப்பதற்காக நேர்ந்துவிட்ட சேவலும் தனது வாரிசுகள் அனைவரும் கிராமத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடாததால் அதை பலிகொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தாததும் ஞாபகம் வருகிறது. அதனால் இந்த வருடம் அந்த சேவலை பலிகொடுக்க அவர் முடிவு செய்கிறார்.

ஆனால் அதை ஆசையாய் வளர்த்து வரும் பேத்தி சாரா, அதை இழக்க மனமின்றி யாருக்கும் தெரியாமல் மச்சு வீட்டில் ஒளித்து வைக்கிறாள்.
மொத்த குடும்பமும் சேவலை காணாமல் ஊரெங்கும் தேட, இறுதியில் சாரா அதை ஒளித்து வைத்திருப்பது நாசர் தவிர அனைவருக்கும் தெரியவருகிறது.

சாரா கெஞ்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைவரும் அது தெரியாதது போலவே நடிக்கின்றனர். ஒருகட்டத்தில் நாசரின் குறும்புக்கார பேரன் ஒருவன் மூலம் விஷயம் தெரியவர நாசர் சாமி விஷயத்தில் என்ன முடிவெடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

இரண்டு மனிநேரம் செட்டிநாட்டு கிராமத்தில் சுற்றி வந்த உணர்வை தருகிறது படம். கிராமத்து பெரியவராக மனதில் நிறைகிறார் நாசர். ஆனால் நாசர் உட்பட பெரியவர்களின் நடிப்பை, குட்டீஸ்களின் நடிப்பு ஓவர்டேக் செய்துவிடுகிறது. படம் முழுவதும் சாந்தமான முகம் காட்டி நம் மனதை அள்ளுகிறார் க்யூட் சாரா. பள்ளிக்கூடத்திற்கே குட்டிப்பாப்பா சாராவை தேடிவரும் சேவலுக்கும் சாராவுக்குமான நட்பு ஆழமாய் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சேவலை மறைத்துவைத்து ஒன்றும் தெரியாதது போல் அவர் ஆட்டும் நாடகம் பலே.

துறுதுறுப்பான இளைஞாக நாசரின் மகன் பாஷா இதில் அவரது பேரனாகவே அறிமுகம் ஆகியிருக்கிறார். அவர் தனது அத்தை மகளான துவாராவை துரத்துவது பருவ ஈர்ப்பு என்றாலும் கொஞ்சம் ஓவர்தான். இளம்பருவத்திற்கே உரிய குறுகுறுப்புடன் வலம் வரும் துவாரா அம்சமான அத்தை பெண்ணாக நம்மை கவர்கிறார்.

சரவணன் அல்ல.., ஷர்வன் என தன்னை சொல்லிக்கொள்ளும் ரே பால் என்கிற இன்னொரு விடாக்கண்டன் கொடாக்கண்டன் சுட்டி ஒருத்தனும் இருக்கிறான். எப்பா என்ன அட்டகாசம் பண்ணுகிறான். வீட்டு வேலைக்காரனாக வரும் ‘மதராசப்பட்டினம்’ வாத்தியார் ஜார்ஜும் அவரது மனைவியாக நடித்திருக்கும் மாலதியும் நகைச்சுவை பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் மாலதி சேவல் காணாமல் போனதை பக்கத்து வீடுகளில் விசாரிப்பது நல்ல டெக்னிக்.

சின்னி பிரகாஷின் ஒளிப்பதிவு செட்டிநாட்டு வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் வளைய வந்திருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் ஜி.வி.பிரகாஷின் இசையும் கூடவே பயணித்திருக்கிறது. குழந்தையின் கண்ணோட்டத்தில் இருந்து பிராணிகளின் மீதான காருண்யத்தை அணுகியிருக்கிறார் இயக்குனர் விஜய்.. ஆனால் படத்தின் கேரக்டர்கள் அனைத்தும் பல இடங்களில் சத்தியத்துக்கு கட்டுப்பட்டாற்போல யதார்த்தம் தொலைத்து நிற்பதுதான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

கிராமத்து வீட்டில் ஹை-பை கனெக்ஷன் இருக்கிறதா என இத்தனூண்டு பொடியன் கேட்கும் அதேநேரத்தில், அன்பான மாமியாராக இருந்தாலும் கூட வெளியூரில் இருந்து வரும் தனது மருமகளிடம் பல வருடங்கள் கழித்து அப்போதுதான் பேசுவதுபோல இன்னும் உனக்கு குழந்தை உண்டாகலையாம்மா என கேட்பது அபத்தமாக இருக்கிறது. கமர்ஷியல் படமெடுத்து கோடிகளில் லாபத்தை அள்ளும் வாய்ப்பிருந்தும் மனதை தொடும் தனது கனவு படத்தை இயக்க முடிவு செய்த இயக்குனர் விஜய்யின் துணிச்சல் பாராட்டத்தக்கது.