“நான் எங்கேயும் போய்விடவில்லையே” ; ‘சாஹசம்’ விழாவில் வருத்தப்பட்ட பிரசாந்த்..!

நீண்ட நாட்கள் கழித்து பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாஹசம்’. கதாநாயகியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெண்டா நடித்துள்ளார். புதியவரான அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் பிரசாந்தின் தந்தையான நடிகர் தியாகராஜன். தமன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய பலரும் நீண்டநாள் கழித்து வந்துள்ள பிரசாந்தின் ரிட்டர்ன் குறித்து பேசினார்கள்.. இன்னும் பலர் அவரது வயது குறித்தும் பேசினார்கள். இறுதியாக மைக் பிடித்த பிரசாந்த், “நீண்ட நாட்கள் கழித்து நான் திரும்பி வந்திருப்பதாக இங்கு பேசிய எல்லோரும் குறிப்பிட்டார்கள். ஆனால் நான் எங்கேயும் போகவில்லையே.. இங்கேதானே இருக்கிறேன்.. மம்பட்டியான், பொன்னர் சங்கர் என ஒவ்வொரு படங்களுக்கும் சில வருடங்களை ஒதுக்கியதுபோல இந்தப்படத்திற்கும் நிதானமாக நாட்களை ஒதுக்கி கவனமாக நடித்து வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசும்போது “எல்லோரும் என் வயது பற்றி பேசினார்கள். இப்போது இருக்கும் நடிகர்களின் வயது தான் எனக்கும்.. என்ன.. ரொம்ப சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் பார்ப்பவர்களுக்கு அப்படி தோன்றுகிறதோ என்னவோ.? தயவுசெய்து என்னை வயதானவனாக ஆக்கி விடாதீர்கள்” என கேட்டுக்கொண்டார் பிரசாந்த்.