சகாப்தம் – விமர்சனம்

கிராமத்தில் சும்மாவே பொழுதை கழிக்கும் சண்முகபாண்டியனுக்கும், அவரது நண்பர் நண்டு ஜெகனுக்கும் மலேசியா வந்தால் வேலை வாங்கித்தருவதாக ஆசையை விதைத்துவிட்டு செல்கிறார் மாமா பவர்ஸ்டார் சீனிவாசன். அதை நம்பி இவர்களும் மலேசியாவுக்கு செல்ல, பவர்ஸ்டாரோ ரோட்டோரக்கடையில் அவர்களை வேலைக்கு சேர்த்துவிடுகிறார். வேலை செட்டாகாமல் போக, பவரின் நண்பர் சிங்கம்புலி மூலமாக வேறு வேலையில் சேர அங்கிருந்தும் விரட்டப்படுகிறார்கள்.

ஒருவழியாக சுப்ரா ஐயப்பா நடத்தும் டிடெக்டிவ் ஏஜென்ஸியில் இருவருக்கும் வேலை கிடைக்கிறது. ரவுடிக்கும்பலை கண்டுபிடித்ததால் போலீசிலும் மரியாதை கிடைக்கிறது. தனது ஊரில் வசிக்கும் பக்கத்து வீட்டு தேவயானியின் கணவர் இங்கே ரஞ்சித் ஜெயிலில் இருப்பதை கண்டுபிடித்து அவரை மீட்கிறார் சண்முகபாண்டியன்.

அவர் மூலமாகவும், தான் காப்பற்றிய டாக்டர் சுரேஷ் மூலமும் போலி மருந்து மற்றும் போதைப்பொருட்கள் தயாரிக்கும் கும்பலைப்பற்றி அறிந்துகொள்ளும் சண்முகபாண்டியன், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களிடம் கொத்தடிமைகளாக இருக்கும் தமிழர்களை விடுவிக்க முயற்சிக்கிறார். இறுதியில் மலேசிய போலீஸ் அதிகாரி விஜயகாந்த்தின் (நம்ம கேப்டன் தாங்க) துணையுடன் அதை சாதித்து சகாப்தம் படைக்கிறார் சண்முகப்பாண்டியன்.

குருவி தலையில் பனங்காயை வைத்து போல முதல் படத்திலேயே, வெளிநாட்டில் வில்லன் கும்பலுடன் மோதும் அளவுக்கு சன்முகப்பாண்டியனுக்கு எதற்காக கதை பண்ணினார்கள் என்பதுதான் புரியவில்லை. அவருக்கு சண்டைக்காட்சிகள் அற்புதமாக வருகிறது. நடிப்பிலோ இதுதான் முதல் படி.. அதற்கேற்றபடி ஒரு கதையை தேர்ந்தெடுத்திருந்தாலோ, இல்லை திரைக்கதையில் மாற்றம் செய்திருந்தாலோ அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கும்.

என்ன இருந்தாலும் கேப்டன்.. கேப்டன் தான். அவர் திரையில் தோன்றியதும் தான் என்ன ஆரவாரம் போங்கள்..?. ரசிகர்களுக்கு போனசாக அவரது சண்டைக்காட்சியும் உண்டு. ஆனால் அவரது கம்பீரமான குரலின் மிடுக்கும், வேகமும் மிஸ்ஸிங் ஆகியிருப்பது காலம் செய்த கோலம் தவிர வேறென்ன..?

இரண்டு கதாநாயகிகளில் சுப்ரா ஐயப்பா அழகாக இருக்கிறார். சுரேஷ், ரஞ்சித், தலைவாசல் விஜய், தேவயானி உட்பட அனைவரும் கேப்டன் படத்தில் நடிக்கிறோம் என்கிற எண்ணத்திலேயே நடித்திருப்பது தெரிகிறது. ஜெகனும் பவர்ஸ்டாரும், சிங்கம்புலியும் தள்ளாடும் திரைக்கதையையும் புதுமுகமான சண்முகப்பாண்டியனையும் அவ்வப்போது தாங்கிப்பிடிக்கிறார்கள்.

திரைக்கதையில் எந்தவித திருப்பமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தனது அடுத்த படத்தில் கேப்டனின் மகன் என்கிற அடையாளத்தை கழட்டிவைத்துவிட்டு தன்னை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சண்முகப்பாண்டியனுக்கு இப்போது கூடியுள்ளது.