“கருந்தேக்கில் செய்த சிலை” – கேப்டனை பாராட்டிய சிவகுமார்..! ; சகாப்தம் விழா ஹைலைட்ஸ்

 

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.. அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா கதாநாயகிகளாக நடிக்க, ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா, ஒரு சிறிய இடைவேளிக்குப்ப்பின் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது.. விழா எங்கும் ஒரே நட்சத்திர கூட்டம் தான்.. விழாவில் சன்முகபாண்டியனை வாழ்த்தி பேசிய வி.ஐ.பிக்களின் சுவராஸ்யமான பேச்சுக்களின் ஹைலைட்ஸ் இங்கே உங்களுக்காக..

சிவகுமார்

உங்கள் தந்தையிடம் இருந்து நேரம் தவறாமை உட்பட நல்ல பண்புகளை கற்றுக்கொள்ளுங்கள்.. ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தில் உங்கள் தந்தை நடித்தபோது அவரது உடம்பு, ஒரே நேரத்தில் பத்து ஆட்களை அடிக்கக்கூடிய வகையில் ‘கருந்தேக்கில் செய்த சிலை’ மாதிரி இருக்கும்.. ஆக உங்களுக்கு ரோல் மாடலாக உங்கள் அப்பா ஒருவரே போதும்..

ஜெயம் ரவி

நான் நடிகனாக அறிமுகமாகி வளர்ந்துவந்த நேரத்தில், எனது படப்பிடிப்பும், அவரது கேப்டனின் படப்பிடிப்பும் அருகருகே நடந்தன. அப்போது அவரைப்பார்க்க சென்றபோது ஒரு நண்பனைப்போல என்னை அழைத்து பேசிய கேப்டன் குரல் பயிற்சிக்காக அடிக்கடி பீச்சிற்கு சென்று சத்தம்போட்டு பேசிப்பழக சொன்னார்.. அதன்படி நானும் செய்தேன்.. அதுதான் இன்று எனக்கு கை கொடுக்கிறது. கேப்டன் விழாவிற்கு போகிறாயா..? அப்பா நீ கேப்டன் கட்சியா என சிலர் கேட்டார்கள்.. அதற்கு நான் ‘அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியிருந்தே கேப்டன் எங்க கட்சி.. நடிப்பு கட்சி’ என அவர்களுக்கு பதில் சொன்னேன்.. சண்முக பாண்டியன் அவர் அப்பா போல நடிக்க வேண்டாம்.. புதிய பாணியை கடைபிடிக்கட்டும்..

சுந்தர்.சி

நான் படம் இயக்கவந்த காலத்தில் மொத்தம் எட்டு நடிகர்கள் தான் டாப்பில் இருந்தார்கள்.. மற்ற ஏழு பேரையும் வைத்து படம் இயக்கிவிட்டேன். ஆனால் கேப்டனை மட்டும் இயக்கும் வாய்ப்பு அமையாமல் போய்விட்டது. அதற்கு ஒரே காரணம் கேப்டன் கதை கேட்காமல் நடிக்க மாட்டார்.. எனக்கு சரியாக கதை சொல்லத்தெரியாது.. சண்முகப்பாண்டியன்.. நீங்களாவது என்னிடம் கதைகேட்காமல் நடிக்க பாருங்க…

சத்யராஜ்

ஒவ்வொருவருக்கும் ஒரு நிர்ப்பந்தம் உருவாகும்போதுதான் அவர்களுக்கு சாதிக்கும் வேகம் வருகிறது.. எனக்கு அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியவர் விஜயகாந்த்.. நான் கதாநாயகனாக நடிக்க வந்த புதிதில் விஜயகாந்த் தான் எனக்கு இம்சை அரசன்.. ‘தகடு தகடு’ன்னு டயலாக் பேசி உள்ள நுழைஞ்சுட்டேன்.. ஆனா என்னை ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் எல்லாம் சார் வெறும் டயலாக் மட்டும் பத்தாது.. விஜயகாந்த் மாதிரி காலை சுழட்டி பைட் பண்ணுங்கள்.. அவர் பரதநாட்டியம் ஆடுறார்.. நீங்களும் டான்ஸ் ஆடுங்கள் என கேட்பார்கள்.. அந்த நிர்ப்பந்தத்தினாலேயே என்னை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டேன்.

விக்ரம் பிரபு

நிச்சயமாக உங்கள் அப்பாவுடன் உங்களை கம்பேர் பண்ணி பேசுவார்கள்.. அவர் அளவுக்கு இல்லையே என்பார்கள்… நாம் அண்ணாந்து பார்க்க வேண்டாம்.. காரணம் அவர்கள் அதையெல்லாம் தாண்டிய உயரத்திற்கு போய்விட்டார்கள்.. நாம் நமக்கு நேராக உள்ள பாதையை மட்டும் பார்த்து அதில் நடப்போம்..

நலன் குமாரசாமி

சண்முக பாண்டியன் ஆக்சன் கேரக்டர்களோடு நின்றுவிடாமல் எல்லா கேரக்டர்களையும் பண்ணவேண்டும்

இந்த விழாவில் இவர்கள் தவிர இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, பி.வாசு, கங்கை அமரன், கே.எஸ்.ரவிகுமார், மகிழ்திருமேனி, நடிகர்கள் பார்த்திபன், பாண்டியராஜன், பிரசாந்த், சிபிராஜ், ஷக்தி, விமல், வாகை சந்திரசேகர், விஜயகுமார், நாசர், சிங்கம்புலி, பவர்ஸ்டார், நடிகை தேவயானி, குட்டி பத்மினி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு சண்முக பாண்டியனை வாழ்த்தினார்கள்.