சாமி² – விமர்சனம்

saamy2

நடிகர்கள் : விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, ஜான் விஜய் மற்றும் பலர்

இசை : தேவிஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு : பிரியன்-வெங்கடேஷ் அங்குராஜ்

டைரக்சன் : ஹரி

கடந்த பத்து வருடங்களில் வெளியான ஹிட் படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் ஆசையை தூண்டி விட்டதே விக்ரம்-ஹரி கூட்டணியில் உருவான சாமி தான். 15 வருடங்களுக்கு முன்பே ‘சாமியின் வேட்டை தொடரும்’ என எண்ட் கார்டு போட்ட ஹரி, இப்போது அதன் இரண்டாம் பாகத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இந்த சாமி ரசிகர்களை எப்படி திருப்திப்படுத்துகிறார்.. பார்க்கலாம்.

டில்லியில் தங்கள் பேரன் விக்ரமை (ராம்சாமி) தங்களது திருநெல்வேலி வாழ்க்கை குறித்து சொல்லாமலேயே வளர்க்கின்றனர் டெல்லி கணேஷ்-சுமித்ரா தம்பதி. ஐ.ஏ.எஸ் பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் விக்ரம், மத்திய மந்திரி பிரபுவுக்கு செகரெட்டரியாக வேலை பார்க்கிறார். ஐ.ஏ.எஸ்.பாஸாகி ட்ரெய்னிங் சென்ற விக்ரம், பயிற்சி முடிந்ததும் திடீரென ஐ.பி.எஸ்ஸை தேர்வு செய்கிறார். ஏதேச்சையாக அவருக்கு திருநெல்வேலிக்கே போஸ்டிங்கும் போடப்படுகிறது.

பேரன் போலீஸ் அதிகாரி ஆனது கண்டு அதிர்ச்சியாகும் தாத்தா டெல்லி கணேஷ், விக்ரமின் தந்தை ஆறுச்சாமியின் (விக்ரம்) வரலாறையும் பிரபல தாதா பெருமாள் பிச்சையை கொன்றதற்காக இலங்கையிலிருந்து வந்த அவரது மகன் ராவண பிச்சை (பாபி சிம்ஹா), விக்ரம் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராஜேஷை கொன்று குவித்த கதையையும் கூறுகிறார்.

இனி திருநெல்வேலி வந்து இறங்கும் ராம் சாமி, ராவண பிச்சையையும் அவரது சகோதரர்கள் ஜான் விஜய், ஓ.ஏ.கே சுந்தர் ஆகியோரின் அடாவடிகளையும் எப்படி எதிர்கொண்டு தனது பகையை முடிக்கிறார் என்பது மீதிக்கதை.

முதல் பாகத்தில் ஆறுச்சாமியாக அசத்திய விக்ரம், இதில் ராம்சாமியாக ரணகளம் பண்ணுகிறார். 15 வருடங்களுக்கு பிறகும் துடிப்பு குறையாத அதே விக்ரமை இதிலும் பார்க்க முடிகிறது. டெல்லியில் அமைதி முகம் கட்டுவது நெல்லையில் அதிரடி முகம் காட்டுவது என இருவித நடிப்பால் தனது கேரக்டர் மூலம் இந்த இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் மனதில் நச்சென பதிய வைக்கிறார். பாபி சிம்ஹாவுக்கு சவால் விட்டு அவர் காரியங்களை சாதிக்கும் காட்சிகள் எல்லாம் திரும்ப படம் பார்க்க தூண்டு ரகம்.

மந்திரி மகளாக வரும் கீர்த்தி சுரேஷ், ஹரியின் நாயகிகளுக்கு உரிய இலக்கணங்கள் எதையும் விட்டுவிடாமல் அழகாக பிரதிபலித்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் த்ரிஷாவுக்கு பதிலாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்ச நேரமே என்றாலும் பாந்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ராவண பிச்சையாக தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டுள்ளார் பாபி சிம்ஹா. விக்ரமுக்கு சமமாக முக்கியத்துவமும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எதிரிகளை கொள்ளும் ஸ்டைலே தனி என்றால், கடைசியில் அவருக்கு கிடைக்கும் தண்டனையும் யாரும் யூகிக்க முடியாதது. அவரது அண்ணன்களாக ஜான்விஜய், ஓ.ஏ.கே.சுந்தர் இருவருமே சரியான தேர்வு..

சூரிக்கு இதில் வேலை குறைவுதான் என்றாலும் ஓரளவு சமாளிக்கிறார். இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ்கான் என இந்த பாகத்திற்கு தேவையான புதிய ஆட்களும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர். மத்திய அமைச்சராக கொஞ்சம் வில்லத்தனம் கலந்து கெத்து காட்டி, பின் பாசமான அப்பாவாக சரண்டராகும் வேலை பிரபுவுக்கு புதிதா என்ன..? அசத்தியிருக்கிறார். வழக்கமான ஹரி பட அம்மாக்களின் டெம்ப்லேட்டில் அச்சு அசலாக பொருத்திக்கொள்கிறார் ஐஸ்வர்யா.

படத்தின் முக்கிய பலமே, முந்தைய பாகத்தின் கேரக்டர்களை இந்தப்படத்திலும் அழகாக இணைத்தது தான். அதேபோல பெருமாள் பிச்சைக்கு ஒரு குடும்பம் இருப்பதாக தனது கற்பனைக்கு அழகாக உருவம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் அதிரூபனே மற்றும் புது மெட்ரோ ரயிலு பாடல்கள் அசத்துகின்றன. பிரியன் மற்றும் வெங்கடேஷ் அங்குராஜின் ஒளிப்பதிவு ஹரியின் வேகத்தை கணக்கிட்டு பரபரவென வேலை பார்த்துள்ளது. ஹரி மட்டுமல்ல, நாமும் பிரியனை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என்பதை உணர முடிகிறது.

தேவையில்லாத காட்சிகள் என எதையுமே படத்தில் ஹரி திணிக்கவில்லை என்பதும் படத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணம். இடைவெளிக்கு முன்னர் என்ன வேகமோ, அது இரண்டாம் பாதியிலும் குறையாமல் இறுதி வரை நகர்த்தி சென்றிருக்கும் ஹரி, தாராளமாக இதன் மூன்றாம் பாகத்திற்கு இப்போதே பிள்ளையார் சுழி போட்டு வேலைகளை துவங்கலாம்.