ருத்ரமாதேவி – விமர்சனம்

ஆண் வாரிசு இல்லாத நாட்டை போராடி காப்பற்றும் பெண் இளவரசியின் கதை தான் இந்த ‘ருத்ரமாதேவி’.

காகத்தீய நாட்டு மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து நாட்டை காப்பற்ற இரண்டாவதாக பிறக்கும் குழந்தை ருத்ரமாதேவியை (அனுஷ்கா), ருத்ரதேவன் என்கிற பெயரில் ஆணாகவே வளர்க்கிறார் மதிமந்திரி பிரகாஷ்ராஜ். மறைவாகவே வளர்க்கப்படும் ருத்ரமாதேவி ஒருகட்டத்தில் மக்கள் முன்னிலையில் இளவரசனாகவே அறிமுகமாகி மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுகிறார்.

எதிரி நாட்டு மன்னனும், உள்நாட்டில் அரச பதவியை அடைய துடிக்கும் பங்காளிகளும் இவர் பெண் என்பதை அறிந்து அதை அம்பலப்படுத்துகின்றனர். மக்களும் தங்களுக்கு ஒரு பெண் நாடாள்வதில் விருப்பம் இல்லை என எதிர்ப்பு தெரிவிக்க, நாட்டைவிட்டு வெளியேறுகிறார் இளவரசி. எதிரிநாட்டு படை போர்தொடுத்து வர மக்கள் இளவரசியிடம் தஞ்சம் அடைகிறார்கள்.

இறுதியில் தனது நண்பர்கள் சாளுக்கிய வீரபத்திரன் (ராணா) மற்றும் கோணகன்னா ரெட்டி (அல்லு அர்ஜுன்) ஆகியோரின் உதவியுடன் எதிரிகளை அழித்து நாட்டை காப்பற்றும் ருத்ரமாதேவி, மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரியணையில் அமர்கிறார்.

அரசிளங்குமரியாக மாறுவதற்கு நிறைய பயிற்சிகள் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அனுஷ்கா. அவரது துணிச்சலையும் உழைப்பையும் காட்சிக்கு காட்சி நம்மால் உணரமுடிகிறது. நாட்டுக்குள் கலகம் விளைவிக்கும் புரட்சிக்காரனாக வரும் அல்லு அர்ஜுன் வரும் காட்சிகள் எல்லாமே ஆயிரம் வாளா பட்டாசு வெடித்த எபக்ட்டை தருகின்றன. ராணாவும் தனது பங்கிற்கு அளவான காதல், அதிகப்படியான வீரம் என ஜொலிக்கிறார்.

நேர்மையான மதியூக மந்திரியாக வரும் பிரகாஷ்ராஜின் பாத்திரப்படைப்பு நம்மை உண்மையிலேயே வசீகரிக்கிறது. ராஜ்யத்தை கைப்பற்ற பங்காளிகள் செய்யும் அத்தனை நரித்தனமான சூழ்ச்சிகளையும் செய்கிறார்கள் சுமனும் ஆதித்யாவும். பெண் என்று தெரிந்தே நாட்டின் நன்மை கருதி, அனுஷ்காவை திருமணம் செய்துகொள்ளும் நித்யா மேனனும், கோனகண்ணா ரெட்டி அல்லு அர்ஜுனை உசுப்பேற்றி காதலிக்கும் இளவரசியாக கேத்தரின் தெரசாவும் கூட நம் கவனம் ஈர்க்கிறார்கள்.

கிராபிக்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தி நம்மை காதை நிகழும் காலகட்டத்திலேயே சுற்றிவர வைத்ததில் ஒளிப்பதிவாளர் அஜய் வின்சென்ட்டும், கலை இயக்குனர் தோட்டாதரணியும் வெற்றி பெற்றுள்ளார்கள்.. வரலாறை விளக்க துணைநின்ற விதத்தில் இளையராஜாவின் இசையில் இதமான பாடல்கள், பின்னணி இசை இரண்டும் சமபங்கு இருக்கிறது.

இயக்குனர் குணசேகரின் படங்களில் விறுவிறுப்பு அதிகம் இருக்கும்… இதில் ருத்ரமாதேவியின் வீரத்தையும் மதியூகத்தையும் பறைசாற்றும் வகையில் சில காட்சிகளை வடிவமைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.. அதேபோல போர்க்கள காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரசிகர்களில் பலருக்கு இது பாகுபலி அளவுக்கு மனதை தொடவில்லையே என்றும் கூட தோன்றலாம். இருப்பினும் குணசேகர், அனுஷ்கா இருவரின் உழைப்பு சோடைபோகவில்லை என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.