ரோமியோ ஜூலியட் – விமர்சனம்

 

ஜிம்மில் ட்ரெய்னராக வேலைபார்க்கும் ஜெயம் ரவி. இருப்பதை வைத்து வசதியாக வாழலாம் என நினைப்பவர் ஆனால் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்ததாலேயே, எதிர்காலத்தில் சொகுசான வாழ்க்கை வாழ நினைகிறார் ஏர் ஹோஸ்டஸ் ஹன்சிகா. அதற்கேற்ற மாதிரி ஜெயம்ரவியை பார்க்கும்போதெல்லாம் ஹன்சிகாவுக்கு அவர் பணக்காரராகவே தெரிகிறார்.

அதனால் ஜெயம்ரவியை வலிய தேடிச்சென்று காதலிக்கிறார் ஹன்சிகா. ஜெயம் ரவியும் அவரை உயிருக்கு உயிராக நேசிக்க தொடங்க, ஒரு கட்டத்தில் ஹன்சிகாவுக்கு அவர் பணக்காரர் இல்லை என்பது தெரியவருகிறது. அடுத்த நிமிடமே ஜெயம் ரவியுடனான் காதலை துண்டிக்கும் ஹன்சிகா, தன்னை தேடிவரும் ஜெயம் ரவியை  அவமானமும் படுத்துகிறார்.

மேலும் கோடீஸ்வரரான வம்சி, ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ள முன்வர, ஹன்சிகா உடனே ஒகே சொல்ல, நிச்சயதார்த்தமும் நடக்கிறது. ஆனால் தன்னை ஹன்சிகா ஏமாற்றியதை தாங்கமுடியாத ஜெயம் ரவி, கோபத்தில் ஹன்சிகாவிடம் தனக்கு அவரை மாதிரியே ஒரு பெண்ணை பார்த்து லவ் பண்ண செட்டப் செய்யுமாறும் இல்லையென்றால் தன்னை காதலித்தபோது எடுத்த போட்டோக்களை ஹனசிகாவின் வருங்கால கணவரிடம் காட்டுவேன் என்றும் மிரட்டுகிறார்.

தனது வசதியான எதிர்கால வாழ்க்கைக்கு இதனால் ஆபத்து வந்துவிடக்கூடாது என பயந்துபோன ஹன்சிகா, ஜெயம் ரவியின் நிபந்தனைக்கு சம்மதித்து அவருக்காக ஒரு காதலியை தேட ஆரம்பிக்கிறார். ஹன்சிகா ஜெயம் ரவிக்கான காதலியை கண்டுபிடித்தாரா..? ஜெயம் ரவியின் திட்டம் தான் என்ன என்பது க்ளைமாக்ஸ்.

காதலுக்காக உருகும் ஜெயம் ரவியைத்தானே இதுவரை பார்த்திருக்கிறோம்.. இதிலும் உருகத்தான் செய்கிறார். ஆனால் காதலிஇடமே இன்னொரு காதலி செட்டப் பண்ணித்தரச்சொல்லும் வில்லத்தனத்திலும் ஜெயம் ரவி அசத்தியிருக்கிறார். ஹன்சிகாவிடம் கெஞ்சும் காட்சியிலும் ஹன்சிகா அவரை அவமானப்படுத்தும் காட்சியிலும் பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார் ரவி.

படத்தின் முக்கிய தூண், முதுகெலும்பு என எப்படி வேண்டுமானாலும் கதாநாயகி ஹன்சிகாவை சொல்லலாம். சொல்லப்போனால் ஜெயம் ரவியையே ஓவர்டேக் பண்ணிவிடுகிறார். பணக்கார வாழ்க்கைக்கு அலைவது, முன்னாள் காதலனை கழட்டிவிட திட்டங்கள் போடுவது, முன்னாள் காதலனுக்காக காதலி தேடுவது, அதற்காக ஜெயம் ரவிக்கு ட்ரெய்னிங் தருவது, பணக்கார வாழ்க்கையில் தான் எதிர்பாத்தது கிடைக்காமல் ஏமாறுவது என கிட்டத்தட்ட காமெடி கலந்த வில்லித்தனம் காட்டி நம்மை அசரடிக்கிறார் ஹன்சிகா.

குறிப்பாக முன்னணி காமெடி நடிகர் இல்லாத குறையை தீர்ப்பது ஹன்சிகா தான்.. சிரிப்புக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தருகிறார் ஹன்சிகா. இந்தப்படத்தில் ஜெயம் ரவியின் காதலை ஹன்சிகா பணத்தை காரணம் காட்டி புறக்கணிக்கும்போது கூட, அவர் மேல் கோபம் வருவதற்கு பதில் பரிதாபமே ஏற்படுகிறது. அதுதான் திரைக்கதையின் பலம்.

மெழுகு சிலையாய் இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுக்கும் பூனம் பஜ்வாவின் ஜென்டில்வுமன் கேரக்டர் ரசிக்கும்படி இருக்கிறது. வி.டி.வி.கணேஷ் அவராகவே வருகிறார். ஜெயம் ரவிக்கு ஐடியா கொடுப்பதுடன் அவரிடம் அவ்வப்போது மாட்டிக்கொண்டு முழிப்பதும் நல்ல கலாட்டா..

கதாநாயகியால் கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்டு பலியாடாக மாறும் மாப்பிள்ளைகள் பட்டியலில் வம்சி கச்சிதமாக இடம்பிடித்திருக்கிறார். ஹன்சிகாவின் தோழிகள் என்று சொல்லிக்கொண்டு அவரும் அந்த மூன்றுபேரும் அடிக்கும் லூட்டி இருக்கிறதே, சின்னக்குழந்தைகள் ஏரியாவை கவர் செய்துவிடும் அட்ராசிட்டி காமெடி அது.

இமானின் இசையில் ‘டண்டணக்கா’ பாடலே படத்தை சுவராஸ்ய மூடுக்கு கொடுவந்துவிடுகிறது. இடைவேளைக்குப்பின் படத்திற்கு ஸ்பீடு பிரேக்கர்களாக எதற்கு இத்தனை பாடல்கள்..? காதலித்தவள் கழட்டிவிட்டால் அவளை எப்படி பாடம் கற்பிக்கவேண்டும் என பத்து வருஷத்துக்கு முன் தனுஷ் கோர்ட் படியேறியது (படத்தில் தான்) ஞாபகத்தில் இருக்கலாம்.

அதே கதையை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் லட்சுமண். உண்மையான காதலும் வாழ்க்கையும் பணத்தினால் மட்டுமே கிடைப்பது இல்லை என போகிறபோக்கில் ஒரு கருத்தையும் தட்டிவிட்டு போகும் லட்சுமண் ஜாலியான ஒரு படத்தையே தந்திருக்கிறார்.