விஷால் படத்தில் 6௦ வயது முதியவராக நடிக்கிறார் ஆர்.கே..!.

நடிகர் ஆர்.கேவின் கம்பீரமான ‘என் வழி தனி வழி’ போஸ்டர்களை பார்த்தவர்கள், இந்த மனிதர் ஹீரோவாகவே நடிக்காமல் ஏன் விஜய் படத்தில் அவரிடம் அடிவாங்கும் வில்லனாகவெல்லாம் நடிக்கிறார் என்கிற கேள்வியை மனதிற்குள் எழுப்பத்தான் செய்வார்கள். ஆனால் அதுதான் ஆர்.கேவின் வில் பவர்.

கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என ஒரு போதும் அவர் அடம்பிடித்ததே இல்லை. அவன் இவன் படத்தில் பாலா நடிக்க அழைத்தபோது, அது வில்லன் வேடம் என்றெல்லாம் பார்க்காமல் அது பாலாவின் படம் என்றுதான் பார்த்தார் ஆர்.கே. அடுத்து ‘ஜில்லா’வில் கொஞ்ச நேரமே வரும் வில்லனாக நடித்ததும் அப்படித்தான்.

இதைப்பார்த்ததும் இயக்குனர் சுசீந்திரனுக்கு ஒரு நப்பாசை.. தற்போது விஷாலை வைத்து அவர் இயக்கிவரும் படத்தில் ஒரு 6௦ வயது பெரியவர் வேடம். அதில் ஆர்.கே நடித்தல் நன்றாக இருக்கும் என நினைத்தவர் தயங்கியபடியே விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

சுசீந்திரன் கேட்ட உடனேயே யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டாராம் ஆர்.கே. இந்த ரகசியத்தை ‘என் வழி தனி வழி’ 25வது நாள் விழா மேடையில், ஆர்.கேவின் முன்னிலையில் வைத்து சுசீந்திரனே உடைத்துவிட்டார். தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ‘வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் ஆர்.கே ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.