ரிச்சி – விமர்சனம்

நிவின்பாலி முதன்முறையாக நேரடியாக தமிழில் நடித்துள்ள படம் தான் ‘ரிச்சி’.. எப்படி வந்திருக்கு பார்க்கலாமா..?

சர்ச் பாதர் பிரகாஷ்ராஜின் மகன் ரிச்சி என்கிற நிவின்பாலி.. சின்னவயதில் தனது நண்பன் கொலைசெய்துவிட்டு தப்பியோடிவிட, அந்தப்பழிக்கு ஆளாகி சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு சென்று திரும்புகிறார். சிறைச்சாலை அனுபவம் அவரை ரவுடியாகவே மாற்றி அனுப்புகிறது. தனது பாஸ் ஜி.கே.ரெட்டியிடம் பணம் வாங்கிவிட்டு தராமல் டிமிக்கி கொடுக்கும் ‘புலி வேஷக்காரன்’ குமரவேலை ரெண்டு தட்டு தட்டி பணத்தை வாங்குவதற்காக ஆளை தூக்குகிறார் நிவின்பாலி.

ஆனால் வெளியூரில் இருந்து படகு மெக்கானிக்காக வந்து வேலை பார்க்கும் நட்டிக்கோ, நண்பன் குமரவேலின் தங்கை லட்சுமிபிரியா மீது காதல். அதனால் காணமல் போன குமரவேலை தேடுகிறார். சரியாக அதேநாளில் சின்ன வயதில் ஓடிப்போன ரிச்சியின் நண்பன் ராஜ்பரத் ஊருக்கு திரும்பி அம்மா துளசியை அழைத்துக்கொண்டு துபாய் செல்ல முயற்சிக்கிறார். இந்த விஷயம் தெரிந்த ரிச்சி, ராஜ்பரத்தை மடக்கி பழிதீர்க்க முயற்சிக்கிறார்.

இந்தமுயற்சி ராஜ்பரத்தை மட்டுமல்ல, நிவின்பாலியையும் நட்டியையும் சேர்த்து ஒருசேர திருப்பித்தாக்குகிறது. அது ஏன், எப்படி என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ரிச்சி பட போஸ்டர்களில் நிவின்பாலியின் ரவுடி கெட்டப், நட்டியின் ஆக்ரோஷம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஆர்வமாக தியேட்டருக்குள் நுழைபவர்களுக்கு இந்தப்படம் புதிய அனுபவமாக இருக்கும் என்பது உண்மை.. நிவின்பாலியின் நேரடி தமிழ்ப்படம் என்றாலும், இவ்வளவு ரிஸ்க்கான பரிசோதனை முயற்சியில் அவர் இறங்கி இருப்பது ஆச்சர்யத்தை தருகிறது. இடைவேளைக்குப்பின் தான் நிவின்பாலி தனது விஸ்வரூபத்தையே காட்டுகிறார். அவரது தமிழ் டப்பிங்கும் நன்றாகவே இருக்கிறது

துறுதுறு நட்டி இதில் வேகத்திற்கு சற்றே விடைகொடுத்து, திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப மெதுவாக பயணித்திருக்கிறார்.. ஆங்காங்கே கொஞ்ச நேரமே வருவது போல தெரிந்தாலும் படம் முழுவதும் வரும்படியாக நட்டிக்கு இன்னொரு ஹீரோ இமேஜையே இந்தப்படம் கொடுத்திருக்கிறது.

பத்திரிக்கை ரிப்போர்ட்டராக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் மீனவ குடும்பத்து பெண்ணாக லட்சுமிபிரியா இருவருக்கும் அளவான, அதேசமயம் நேர்த்தியான காட்சிகள். அவர்களும் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள். சர்ச் பாதராக யார் வேண்டுமானாலும் நடித்துவிட்டு போகக்கூடிய கேரக்டரை பிரகாஷ்ராஜூக்கு தந்துள்ளதால் அதில் நமக்கு ஏமாற்றமே..

விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் கேரக்டருக்கு பொருத்தமாக தனது அறிமுகத்தை துவக்கியுள்ளார். நிவின்பாலியின் நண்பனாக வரும் ஆடுகளம் முருகதாசுக்கும் குமரவேலுவுக்கும் இந்தப்படத்தில் மிகப்பெரிய பங்கு உண்டு.. கதையின் திருப்புமுனை கேரக்டர்களாகவே அவர்கள் வலம் வருகின்றனர். சின்னவயதில் ஓடிப்போன கேரக்டரில் ராஜ்பரத் கச்சிதமாக பொருந்துகிறார். அவரது அம்மாவாக துளசியும் ஒகே.

இடைவேளைக்கு முன்பு மிக மெதுவாக நகரும் திரைக்கதை, எந்த அதிரடிகளும் இல்லாமல் நிவின்பாலி ஜீப்பிலேயே உலா வருவது, போலீஸ் அதிகாரிகள் போல இடுப்பில் பெல்ட்டுடன் கூடிய துப்பாக்கியுடன் வலம் வருவது என பல விஷயங்கள் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர்களாக இருக்கின்றன. மேக்கிங் என்கிற வகையில் படம் நம்மை ரசிக்க வைத்தாலும், ஜனரஞ்சகமான படத்தை எதிர்பார்த்து வரும் சாதாரண ரசிகன் முழு திருப்தி அடைவானா என்பதை கணிக்க முடியவில்லை.