“அனேகமாக ரவுடியிச படமாகத்தான் உருவாகும்” – ஒளிப்பதிவாளர் குகன் தமாஷ்..!

மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை வைத்து அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான ‘பெங்களூரு டேய்ஸ்’  படம் தமிழில் ரீமேக் ஆகிறதல்லவா..? பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்குகிறார்.

இதன் மூலம் தெலுங்கிலிருந்து தமிழுக்கு முதன்முறையாக அடியெடுத்துவைக்கும் இவர் நம் தமிழ்நாட்டுக்காரர் தான். செல்வராகவனின் நெருங்கிய நண்பர். இவர் இயக்கிய ‘பொம்மரிலு’ தான் தமிழில் ‘சந்தோஷ் சுப்ரமண்யம்’ ஆக மாறியது.

‘பெங்களூரு டேய்ஸ்’ படத்தில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி ஆகியோர் நடித்த கேரக்டர்களில் முறையே ஆர்யா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகியாக நஸ்ரியா  நடித்த வேடத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்க, ஒரிஜினலில் பார்வதி மேனன் நடித்த கேரக்டரில் மீண்டும் அவரே நடிக்கிறார்.

குகன் ஒளிப்பதிவு செய்ய, ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தரே இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப்படத்திற்கான பூஜை இன்று காலை ஏவி.எம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படக்குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய இந்தப்படத்தின் கேமராமேன் குகன், “பெங்களூர் டேய்ஸ்’ படத்தில் நடிச்சவங்கள்லாம் ரொம்ப சாப்டா இருந்தாங்க.. இங்க இருக்கிற ஆளுங்க ரவுடிக மாதிரி இருக்காங்க.. அனேகமாக ரவுடியிச படமாகத்தான் உருவாகும் போல தெரிகிறது “ என கலாட்டா செய்தார்.