வெளிச்சத்துக்கு வந்த ‘ராட்சசன்’ முகம்..!

ratchasan villain revealed

சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. விஷ்ணு, அமலாபால் நடித்துள்ள இந்தப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார். ஒரு பக்காவான சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப்படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்து அனைவரையும் பதறவைத்த அந்த வில்லனை பற்றித்தான் ஒரே பேச்சாக இருந்து வருகிறது.

பெண் தோற்றத்தில், அவலட்சணமான பையன் தோற்றத்தில் நடித்த அந்த நபர் யார் என்பதை தற்போது ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் வெளிப்படுத்தியுள்ளார். ஆம். இதற்காகவே ஒரு பத்திரிகையாளர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அவரை அறிமுகப்படுத்தினார்.

அவர் பெயர் சரவணன்.. நான் என்கிற படத்தில் சலீம் என்கிற கேரக்டரில் நடித்தவர் இவர்தான். அதன்பின்னர் இவரை ‘நான் சரவணன்’ என்றே பலரும் அழைத்து வருகின்றனர்.

இந்த கேரக்டரில் நடிக்கவேண்டும் என இயக்குனர் ராம்குமார் கூறியதும், தன்னுடைய முகம் திரையில் தெரியாவிட்டாலும், இந்த கேரக்டரால் தான் பேசப்படுவோம் என நம்பிக்கை வைத்து ஒப்புக்கொண்ட சரவணன் உண்மையிலேயே அந்த வெற்றிக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

இந்தப்படத்திற்காக தினமும் பலமணி நேரம் மேக்கப் போட்டுக்கொண்டு, அதனாலேயே உணவு எதுவும் சாப்பிடமுடியாமல் வெறும் ஜூஸ் போன்றவற்றையே குடித்து மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் தனது கேரக்டருக்காக, மேஜிக்கையும் கூட தானாகவே கற்றுக்கொண்டு அசத்தியுள்ளார் இந்த சரவணன்.

பார்ப்பதற்கு பாலிவுட் நடிகரைப்போல இருக்கும் சரவணனை தேடி இனி நிறைய வாய்ப்புகள் வரலாம்.