ராட்சசன் – விமர்சனம்

raatchasan review

நடிகர்கள் : விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட், மைனா சூசன் மற்றும் பலர்.

இசை : ஜிப்ரான்

ஒளிப்பதிவு : பி.வி.ஷங்கர்

டைரக்சன் : ‘முண்டாசுப்பட்டி’ புகழ் ராம்குமார்

சைக்கோ த்ரில்லர் கதை ஒன்றை வைத்துக்கொண்டு சினிமா இயக்குனராக ஆசைப்பட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார் விஷ்ணு விஷால். பட சான்ஸ் கிடைக்காவிட்டாலும் அவரது போலீஸ் மாமா முனீஸ்காந்த் கட்டாயத்தால் வாரிசு அடிப்படையில் எஸ்.ஐ ஆக போலீசில் சேர்கிறார் விஷ்ணு. சேர்ந்த நாளில் இருந்தே பள்ளி மாணவிகள் காணமல் போவதும் அதை தொடர்ந்து அவர்கள் ஒரே மாதிரியான முறையில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடப்பதும் தொடர்கிறது.

ஆரம்பத்தில் க்ளூ கிடைக்காமல் திணறினாலும், அடுத்தடுத்த கொலைகளில் உள்ள ஒற்றுமையை தனது சினிமா அறிவை வைத்து கண்டுபிடிக்கிறார் விஷ்ணு.. ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப் போய் அவரது அக்கா மகளும் கடத்தப்படுகிறார். யார் அந்த சைக்கோ கொலைகாரன்..? இந்த தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன..? விஷ்ணுவால் அவனை பிடிக்க முடிந்ததா..? தனது அக்கா மகளை மீட்க முடிந்ததா என்பது மீதிக்கதை.

இதற்கு மேலே கதையை சொன்னால் சுவாரஸ்யம் கெட்டுவிடும். அந்த அளவுக்கு இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர த்ரில்லர் அனுபவத்தை படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தொடங்கி என்ட் கார்டு போர்டும் வரை இந்தப்படத்தில் கொடுத்திருகிறார் இயக்குனர் ராம்குமார். முண்டாசுப்பட்டி என்கிற முழு நீள காமெடிப்படத்தை இயக்கியவர் இவர் தான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாது. அந்தளவுக்கு புது ஏரியாவில் புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர்..

இந்தக்கதை சுமார் 17 ஹீரோக்களால் நிராகரிக்கப்பட்டு கடைசியாகத்தான் விஷ்ணு விஷால் கைக்கு வந்ததாக இயக்குனர் சொல்லியிருந்தார். ஆனால் இந்த கதையும் அந்த எஸ்.ஐ கேரக்டரும் விஷ்ணுவுக்கென்றே உருவாக்கப்பட்டது போல் அல்லவா இருக்கிறது. அதனால் கதை சரியான நபரை தேடித்தான் சென்று சேர்ந்திருக்கிறது. சைக்கோ கொலைகாரனை இஞ்ச் பை இஞ்ச் ஆக நெருங்கும் நடிப்பில், பாடி லாங்குவேஜில் என ஆளே புதிதாக தெரிகிறார் விஷ்ணு.. படம் பார்க்கும் போது நாமும் விஷ்ணுவுடன் சேர்ந்து ஓடும் அனுபவம் நமக்கு கிடைப்பது என்னவோ உண்மை.

அளவாகவே வந்தாலும் கதைக்கு தேவையான இடங்களில் கதாநாயகியாக வரும் அமலாபால் நடிப்பில் ரொம்பவே பக்குவம். முனீஸ்காந்த், காளி வெங்கட் இருவரும் காமெடியை ஒதுக்கி வைத்து விட்டு கதாபாத்திரமாக மாறி சபாஷ் பெறுகிறார்கள். இன்ஸ்பெக்டராக வரும் மைனா சூசன் அலட்டால் பேர்வழியாக நடிப்பில் கறார் காட்டியிருக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் கதைக்கு திருப்பம் ஏற்படுத்தும் கேரக்டரில் வழக்கம்போல ராதாரவி கெத்து காட்டுகிறார். உயர் அதிகாரியாக வரும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், விஷ்ணுவுக்கு உதவியாக வரும் சீனியர் போலீஸ்காரர், விஷ்ணுவின் அக்கா மகள், டாக்டராக வரும் நிழல்கள் ரவி மற்றும் அந்த காமுக ஆசிரியர் என கதாபாத்திர தேர்வு செம பிட்.

அடுத்து என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பு தீக்கு தனது பின்னணி இசையால் பெட்ரோல் ஊற்றி தகிக்க விடுகிறார் ஜிப்ரான். த்ரில்லர் படத்துக்கு தேவையான வெகு நேர்த்தியான ஒளிப்பதிவு, மிகவும் வித்தியாசமான கோணங்கள் என ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கரும் தனது பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் தான் சற்றே நீ…….ளம். கிட்டத்தட்ட இரண்டு இடங்களில் படத்தை லாவகமாக முடிக்கும் வாய்ப்பு இருந்தும் இயக்குனர் ஏனோ இழுத்திருக்கிறார். அதுகூட த்ரில்லிங் தான் என்றாலும் ஓரளவுக்கு மேல் திகட்டிவிடும் இல்லையா..? மேலும் பள்ளி மாணவிகள் சம்பந்த காட்சிகள், டெட்பாடியை காட்டுவது ஆகியவற்றில் இயக்குனர் தானே முன்வந்து கத்திரி போட்டிருக்கலாம். அதேபோல எந்த இடத்திலும் சிசிடிவி புட்டேஜ் என ஒன்று இருப்பதையே போலீசார் சாவகாசமாக மறந்துவிட்டது மிகப்பெரிய லாஜிக் மீறல்.

மற்றபடி அந்த சைக்கோ கொலைகாரன் யார் என்பதை யூகிக்க முடியாதவாறு கொண்டு சென்றிருப்பது திரைக்கதையின் பலம். அவன் யாரென்று தெரிந்த பின்னர் விஷ்ணுவுக்கும் அவனுக்குமான ஆடுபுலி ஆட்டமும் செம விறுவிறு.. கடைசிவரை வில்லன் யாரென்றே சொல்லவில்லை என்கிறீர்களா..? படம் பாருங்கள்.. அந்த ராட்சசன் யாரென்பதையும் அவன் என்ன செய்கிறான் என்பதையும் அது தான் த்ரில்..

மொத்தத்தில் இந்த ராட்சசன் – ரசிக்க வைப்பவன்.. பதற வைப்பவன்.