ரஜினி பஞ்ச் டயலாக்கை மறைத்தோம் – ஆர்.கே பட 25வது நாள் விழாவில் ரமேஷ்கண்ணா ருசிகரம்..!

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘என் வழி தனி வழி’ படம் நேற்று வெற்றிகரமாக 25வது நாளை தொட்டது. இப்போதுள்ள போட்டி நிறைந்த சூழலில் இது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் என்பதால் இதை மிகப்பெரிய விழாவாக கொண்டாடி விட்டார் ஆர்.கே

இந்த விழாவில் டத்தோ ராதாரவி, ரமேஷ்கண்ணா, சுசீந்திரன், இயக்குனர் திரு,, நீது சந்திரா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய ரமேஷ்கண்ணா இந்தப்படத்தின் டைட்டில் படையப்பா படத்தில் ரஜினியுடன் தான் இணைந்து நடித்தபோது பஞ்ச் டயலாக்காக உருவான விதத்தையும், அது படமாக்கப்பட்ட விதத்தையும் பற்றி சொல்லி சுவராஸ்யம் கூட்டினார்.

“என் வழி தனி வழி’ என்கிற டயலாக்கை ‘படையப்பா’ படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்காக  தயார் செய்து விட்டோம். ஆனால் படம் வெளியாவதற்கு முன்னர் இந்த டயலாக் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக ரஜினி இந்த வசனம் காட்சிகளில் எல்லாம் அவரை வெறுமனே வாயை மட்டும் அசைக்க வைத்தோம்.. அதனால் சுற்றியிருந்த படக்குழுவினருக்கே இந்த பஞ்ச் டயலாக் படம் வெளியாகும் வரை தெரியாது.. அப்படிப்பட்ட மந்திர வரிகளை தனது படத்திற்கு டைட்டிலாக வைத்து வெற்றி பெற்றிருக்கிறார் ஆர்.கே” என புதிய விஷயம் ஒன்றை ரஜினி ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார்.