ராமானுஜன் – விமர்சனம்

கணிதமே தனது உயிர்மூச்சு என வாழ்ந்த ஒரு மாபெரும் மேதையின் வாழ்க்கை தான் ‘ராமானுஜன்’ திரைப்படம். இதுவரை வெறுமனே ஒரு சாதனையாளர் என்கிற அளவில் ஒரு பெயராகவே கேள்விப்பட்டு வந்த ராமானுஜத்தின் வாழ்க்கையை செல்லுலாய்டு சிற்பமாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர் ஞான ராஜசேகரன்.

ராமானுஜமாக வாழ்ந்திருக்கும் அபிநய் தவிர வேறு ஒருவர் அந்த கதாபாத்திரத்தை சரியாக பிரதிபலிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஜெமினி கணேசனின் பேரன் அல்லவா..? அந்த ரத்தம் ஓடத்தானே செய்யும்.?

இந்தப்படத்தில் ராமானுஜத்தின் முன்னேற்றத்திற்கு படிக்கல்லாய் நடித்திருக்கும் அனைவருமே தங்களது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். யாரையும் தனியாக புகழ வேண்டிய அவசியமும் இல்லை. காரணம் அனைவருமே அனுபவித்து வாழ்ந்திருக்கிராகள்.

சன்னி ஜோசப்பின் ஒளிப்பதிவும் அதற்கு உயிர்கொடுக்கும் ரமேஷ் விநாயகத்தின் இசையும் நம்மை ஆங்கிலேயர் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன. ஒருவரின் வாழ்க்கை வரலாறை படமாக உருவாக்கும்போது அது சீக்கிரமே போரடித்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமும் போவதே தெரியாமல் நம்மை இருக்கையிலேயே கட்டிப்போட்டு விடுகிறது பி.லெனின் சீரிய படத்தொகுப்பு.
ராமானுஜன் இன்றைய மாணவர்கள் அனைவருமே கட்டாயம் காணவேண்டிய ஒரு மாமனிதனின் வாழ்க்கை. அவர்கள் மட்டுமல்ல.. தனது குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒளிந்துள்ள தேடலை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சொல்லியுள்ளதற்காக அவர்களது பெற்றோர்களும் நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்.

ராமானுஜனை ஆவணப்பதிவாக்கி அதை கமர்ஷியலான வெற்றிப்படமாகவும் தந்துள்ள ஞானராஜசேகரனை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.