சிட்டி-ரஜினி ஒரே நேரத்தில் தோன்றி அசத்திய ‘2.O’ இசைவெளியீட்டு விழா..!

2-o-first-look-1
இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக உருவாகி இருக்கிறது சூப்பர்ஸ்டார் ரஜினி-ஷங்கரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘2.O’.. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் பாலிவுட்டை சேர்ந்த அக்சய்குமார் வில்லனாக நடித்திருப்பதால், பாலிவுட்டில் நம்மைப்போலவே இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்காகி இருக்கிறது.

அதனால்தானோ என்னவோ இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை மும்பையில் நேற்று நடத்தினார்கள் படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனத்தினர். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.. பாலிவுட் ‘கான்’களில் முக்கியமானவரான சல்மான்கான் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நம் ஊரில் இருந்து இந்தப்பத்தின் குழுவினரோடு ஆர்யா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிலரும் கலந்துகொண்டனர்.

‘ஐ’ படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது விழா அரங்கில் ஓநாய் மனிதன் கெட்டப்பில் விக்ரமை வலம் வரச்செய்து அசத்திய ஷங்கர் இந்த விழாவிலும் ஒரு புதுமையை செய்திருந்தார். அதாவது மற்ற பிரபலங்களை எல்லாம் வரவேற்ற கரண் ஜோஹர், ரஜினியை வரவேற்றபோது அவர் வராமல் போகவே திகைத்தார்.. ஆனால் பார்வையாளர்களின் வரிசையில் திடீரென நடுநாயகமாக அமர்ந்திருந்த ‘சிட்டி’ ரோபாவை பார்த்து கரண் ஜோஹர் உட்பட விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அசந்து போனார்கள்.

கீழே அமர்ந்திருந்த சிட்டி ரோபோவிடம் கரண் ஜோஹர் பல கேள்விகளை கேட்க, அதற்கு சளைக்காமல் பதில் சொன்னார் ‘சிட்டி’ ரஜினி.. இறுதியாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, எனக்கு விடை தெரியாது நீங்கள் அவரைத்தான் கேட்கவேண்டும் என்றார் ‘சிட்டி’.. யார் அவர் என கரண் ஜோஹர் கேட்க, அடுத்தகணமே மேடையில் இயல்பான தோற்றத்தில் பிரசன்னமானார் சூப்பர்ஸ்டார்..

ஒரே நேரத்தில் மேடையில் சூப்பர்ஸ்டார்.. பார்வையாளர்கள் வரிசையில் சிட்டி.. பார்வையாளர்கள் அடைந்த ஆனந்த அதிர்ச்சியைப்பற்றி சொல்லவும் வேண்டுமோ..?