பூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

rajini praise boomerang (1)

ஆர்.கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே.பாலாஜி, சதீஷ், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ள பூமராங் படம் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ளது. விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த்தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் இந்தப்படம் பேசுகிறது.

நதிநீர் இணைப்பை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இந்தப்படம் பற்றிய விபரங்களை அறிந்து இயக்குனர் கண்ணனை தன் இல்லத்துக்கே அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

இயக்குனர் கண்ணன் இதுகுறித்து கூறும்போது, “ரஜினி சார் எங்கள் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை ரசித்த விதத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக இந்திய நதிகளை இணைப்பதன் அடிப்படையிலான ‘தேசமே’ பாடலை அவர் மிகவும் ரசித்தார். இந்த பாடலை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்ததோடு, பாடலின் பிரமாண்டத்தையும் வெகுவாக பாராட்டினார். அவர் அத்துடன் நிறுத்தாமல், இந்தப் பாடல் உருவாக்கத்தின் பின்னால் இருந்த ஒவ்வொரு விவரத்தை பற்றியும் மிக ஆர்வத்துடன் கேட்டார்…

பல்லாயிரம் கோடி பாராட்டுகளைப்பெற்ற அவரிடமிருந்து, எங்களுக்கு ஒரு பாராட்டு கிடைத்ததும் அது பல கோடி பாராட்டுகளுக்கு சமம் என்று நெகிழ்ந்தேன். நான் கிளம்பும்போது, கண்டிப்பாக பூமராங் படத்தைப் பார்க்கிறேன் என்றார் ரஜினி சார்… இதுவே எங்கள் குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றி..!” என்கிறார் கண்ணன்.