“என் ஸ்பீடு உங்களுக்கும் வந்துருச்சா” ; நடிகரை கலாய்த்த ரஜினி..!

R Asokh Pandiyan 1

சமீபகாலமாக வெளியான சில படங்களில் தும்பை பூவைப்போன்ற நரைத்த தலையுடன், ஆனால் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ஒருவரை டாக்டராக, போலீஸ் அதிகாரியாக, தொழிலதிபராக, கதாநாயகியின் தந்தையாக என பல பரிமாணங்களில் பார்த்து இருப்பீர்கள்.. அப்படி ஒருவர் உங்களை கவனம் ஈர்த்து இருந்தால் நிச்சயம் அந்த நபர் அசோக் பாண்டியனாகத்தான் இருப்பார்.

இன்று குணச்சித்திர துணை காதாபாத்திரத்திற்கான தேடலில் உள்ள பல இயக்குனர்களும் தங்களது படத்திற்கான நடிகர்கள் பட்டியலில் இவரது பெயரை ஆரம்பத்திலேயே டிக் பண்ணி வைத்து விடுகின்றனர்.. அந்த அளவுக்கு அசோக் பாண்டியன் குறுகிய கால அளவில் திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டாருடன் ‘2.O’, கடம்பன், காதல் காலம், காஞ்சாரன் ஆகிய படங்களில் நடித்துவருகிறார் அசோக் பாண்டியன். ஷங்கர் டைரக்சனில் ‘2.O’ படத்தில் நான்கு நாட்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பொன்னான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது தான் ஹைலைட்.. முதல்நாள் காலையிலேயே ரஜினிக்கும் இவருக்கும் தான் முதல் ஷாட்டே. தலைவருடன் நடிக்கப்போகிறோம் என்கிற பதட்டம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் நடித்த அசோக் பாண்டியன் வசனத்தில் மட்டும் கொஞ்சம் ஸ்பீட் கூட்டிவிட்டாராம்.

அந்த ஷாட் முடிந்ததும் அருகில் வந்த ஷங்கர், “எல்லாம் ஒகே சார்.. டயலாக் ஸ்பீட் மட்டும் கொஞ்சம் குறைச்சுக்குங்க என சொல்ல, அருகில் இருந்த ரஜினி சிரித்துக்கொண்டே “நம்ம பக்கத்துல இருந்தாலே ஸ்பீட் வந்துருதுல்ல” என ஜாலியாக கூறி அசோக் பாண்டியனை உற்சாகப்படுத்தினாராம்… அடுத்த ஷாட்டில் காட்சி ஓகே ஆக, “ரெண்டாவது டேக்கிலேயே ஷங்கர் கிட்ட ஒகே வாங்குன ஆளு நீங்களாத்தான் இருக்கும்” என பாராட்டவும் செய்தாராம் ரஜினி.