ரஜினியின் ‘மூன்றுமுகம்’ ரீமேக்கில் லாரன்ஸ்..!

moonru-mugam

அஜித் விஜய்யில் இருந்து அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை எல்லோருமே தங்கள் படத்துக்கு வைத்தால் ரஜினி நடித்த பட டைட்டிலை நன்றாக இருக்குமே என்றுதான் நினைப்பார்கள்.. ஆனால் எல்லோருக்கும் ரஜினி பட டைட்டில் கிடைத்துவிடுகிறதா என்ன..? இதில் இன்னும் சிலர் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகளை டைட்டிலாக்கி அதையே தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைத்துக்கொள்கின்றனர்.

ஆனால் ரஜினியின் சீடன், தீவிர ரசிகன் என்று அறியப்படுகிற லாரன்ஸ், தனது அடுத்த படத்திற்கு ரஜினியின் சூப்பர்ஹிட் படமான ‘மூன்றுமுகம்’ படத்தின் டைட்டிலை வாங்கிவிட்டார். இது வெறும் டைட்டிலுக்காக மட்டுமே வாங்கவில்லை.. அந்தப்படத்தை அதேபெயரில் ரீமேக் செய்தும் நடிக்கிறார் லாரன்ஸ். விஜய் தனது ‘தெறி’ படத்திற்காக இந்த டைட்டிலை கேட்டார் என்றும் அது சில காரணங்களால் அவருக்கு அப்போது கிடைக்காமல் போனது என்பதும் குறிப்பிடத்ததக்கது.

மிக பிரமாண்டமாக ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப்படத்தின் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும். லாரன்ஸ் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.