டிச-31ல் அரசியல் பற்றிய முடிவை அறிவிக்கிறார் ரஜினி..!

RAJINI FANS MEET 2

கடந்த மேமாதம் முதல் கட்டமாக தனது ரசிகர்களில் ஒரு பகுதியினரை சந்தித்து போடோ எடுத்துக்கொண்டார் ரஜினி. அதை தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டமாக ரசிகர்களுடனான சந்திப்பு ஆரம்பமாகியிருக்கிறது. இன்று முதல் நாளிலேயே தனது அரசியல் முடிவு குறித்த தகவலை தானாகவே வெளிப்படுத்தினார் ரஜினி.

“அரசியலுக்கு நான் புதிதல்ல. 1996-ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். யுத்தத்துக்கு வந்தால் ஜெயிக்க வேண்டும். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம். ஏன் நான் இத்தனை இழுக்கிறேன் என கேட்கிறார்கள். வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவேன். அரசியலுக்கு வருவேன் என சொல்லவில்லை. அரசியல் முடிவை அறிவிப்பேன் என்றுதான் சொல்கிறேன்,” என கூறியுள்ளார் ரஜினி.

இந்தப்பின் துவக்கத்தில் ரஜினியை முதன்முதலில் கதாநாயகனாக்கி படம் தயாரித்த தயாரிப்பாளர் கலைஞானமும், ரஜினிக்குள் மறைந்திருந்த நடிப்புத்திறமையை வெளியே கொண்டுவந்த இயக்குனர் மகேந்திரனும் கலந்துகொண்டு ரஜினியை வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் மகேந்திரன். “ரஜினியிடம் அரசியல் பற்றி இதுவரை நான் பேசியது இல்லை. அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை அறிய நானும் காத்திருக்கிறேன். ரஜினியின் வளர்ச்சிக்கு காரணம் அவருடைய நிதானம் தான். 42 ஆண்டுகால பொறுமை அவரை உயர்வான இடத்துக்கு எடுத்து செல்ல போகிறது. யாரிடமும் இல்லாத ஒரு ஈர்ப்பு அவரிடம் உள்ளது.

ரஜினியை உடனடியாக அரசியலுக்கு வரச்சொல்லி நெருக்கடி கொடுக்க வேண்டாம். ஒரு நல்ல தலைவனுக்குரிய அனைத்து அம்சங்களும் அவரிடத்தில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தலைமை என்று யாராவது இருக்கிறார்களா…? ரஜினியின் நிதானத்தை ரசிகர்களும் ஏற்று, அவர் பேச்சை கேட்டு கடமையாற்ற வேண்டும்” என்றார்.