28 வருடம் கழித்து விஜய் படத்தில் நடிக்கிறார் ராதிகா..!


 இது ஏதேச்சையாக நடந்ததா இல்லையா என்பது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. அஜித், சூர்யா உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் அம்மாவாக, அக்காவாக அல்லது ஏதோ ஒரு கேரக்டரில் நடித்த ராதிகா இவ்வளவு நாட்களாக விஜய்யுடன் மட்டும் எந்தப்படத்திலும் சேர்ந்து நடிக்காமல் இருந்தது திரையுலகை பொறுத்தவரை ஒரு அதிசயம் தான்.

ஆனால் 1988ல் விஜய் சிறுவனாக நடித்த காலகட்டத்தில் ‘இது எங்கள் நீதி’ என்கிற படத்தில் மட்டும் விஜய்யுடன் நடித்திருந்தார் ராதிகா. இப்போது 28 வருடம் கழித்து இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் சரித்திர நிகழ்வை உருவாக்கியுள்ளார் இயக்குனர் அட்லி.. ஆம் விஜய்யை வைத்து அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் ராதிகாவும் நடிக்கிறார்.

இந்த தகவலை ராதிகாவே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்தில் மீண்டும் சமந்தா விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். இன்னொரு நாயகியாக எமி ஜாக்சன் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் விஜய் போலீசாக நடிக்க இருக்கிறார் என்பது காற்றுவாக்கில் வந்த கூடுதல் தகவல்.