புரியாத புதிர் – விமர்சனம்

puriyaatha-puthir-movie-review

எடுக்கப்பட்டு சில வருடங்களாகி, நீண்ட போரட்டங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் படம்.

இசைக்கருவிகள் விற்பனை கடையில் வேலைபார்க்கும் விஜய்சேதுபதிக்கு இசைமீது ஈடுபாடு கொண்ட காயத்ரியை பார்த்ததும் காதல் வருகிறது.. எதிர்பார்த்த மாதிரியே இருவரும் காதலர் ஆகின்றனர்.. இந்தநிலையில் விஜய்சேதுபதியின் நண்பர்களில் ஒருவர் அவருடைய கள்ளக்காதல் வெளியான அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் காயத்ரியின் உடைமாற்றும் ஆபாச காட்சி ஒன்று விஜய்சேதுபதியின் செல்போனுக்கு வருகிறது. டென்சன் ஆகும் விஜய்சேதுபதி பார்ப்பவர்களை எல்லாம் சந்தேகத்தில் அடிக்கிறார். எதனால் விஜய்சேதுபதி இப்படி நடந்துகொள்கிறார் என உண்மை தெரியவரும் காயத்ரி தற்கொலைக்கு முயற்சி செய்து பின் காப்பாற்றப்படுகிறார்..

விஜய்சேதுபதியும் காயத்ரியும் நெருக்கமாக இருக்கும் வெடியோ ஒன்றும் விஜய்சேதுபதியின் மொபைலுக்கு வர, சூடாகும் விஜய்சேதுபதி அது யாருடைய மொபைல் எண் என விசாரிக்க, அது சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோன மஹிமாவின் நம்பர் என தெரிய வருகிறது.. தொடர்ந்து விஜய்சேதுபதியின் இன்னொரு நண்பரான அர்ஜுனனும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதாகிறார். அதற்கும் ஒரு வீடியோ தான் காரணமாக அமைகிறது.

தனக்கு நேரும் சங்கடங்கள், நண்பர்களின் மரணம், கைது ஆகியவை அனைத்துமே தாங்கள் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளால் மட்டுமே நடப்பதை கண்டறிகிறார் விஜய்சேதுபதி.. அவரையும் அவரது நண்பர்களையும் குறிவைத்து இப்படி தொடர்ந்து நடக்க காரணம் என்ன..? இதில் காயத்ரி எப்படி உள்ளே வந்தார்…? இறுதியாக விஜய்சேதுபதிக்கு என்ன ஆனது என திக் திக் என திகைக்க வைத்து சமூக அக்கறையுடன் மெசேஜ் ஒன்றையும் சொல்லி அனுப்புகிறார்கள்.

விஜய்சேதுபதியின் நடிப்பை பற்றி சொல்வது மீண்டும் மீண்டும் தெரிந்த திருக்குறளுக்கு தெளிவுரை சொல்வது போலத்தான். காயத்ரிக்கு நடிக்க வாய்ப்புள்ள நிறைய காட்சிகள்.. அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு கதைப்படி நியாயம் தான். மஹிமாவின் பிளாஸ்பேக் காட்சி நம்மை ‘உச்’ கொட்டுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் நம்மிடம் உள்ள சில வக்கிரங்களை களையெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பொட்டில் அறைந்தாற்போல உணர்த்துகிறது.

முதல் இருபது நிமிட காட்சிகள் சற்றே சலிப்பை தந்தாலும், அடுத்ததடுத்த த்ரில்லிங் காட்சிகளால் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. தனது அந்தரங்கமாகட்டும், அடுத்தவர் அந்தரங்கமாகட்டும் அதை மொபைலில் படமெடுப்பதும் அதை தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவருக்கு பரப்புவதும் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் எப்படி கொடூரமாக விளையாடுகிறது என்கிற படிப்பினையை இந்தப்படத்தின் மூலம் கற்றுக்கொண்டால் அதுவே இந்தப்படத்தின் உண்மையான வெற்றி.