புலி முருகன் – விமர்சனம்

pulimurugan tamil review

இரைதேடி ஊருக்குள் வந்து மலைகிராம மனிதர்களை கொல்லும் புலியிடமிருந்து அவர்களை காக்கும் ரட்சகன் தான் இந்த புலி முருகன்.

சிறுவயதில் தாய்தந்தையை இழந்து மலைகிராம மக்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் மோகன்லால்.. மனைவி, மகளுடன் கிராமத்தில் லாரி ஓட்டும் மோகன்லால் தனது தம்பியை பாசத்துடன் வளர்த்து கல்லூரியில் படிக்க வைக்கிறார்.. நண்பனின் கம்பெனியில் தனக்கு வேலைகிடைக்க போவதாக தம்பி சொன்னதாலும், அதே கம்பெனியில் கேன்சருக்கு மருந்து தயாரிக்க கஞ்சா தேவைப்படுகிறது என தம்பியின் நண்பன் கூறியதாலும் காட்டிலிருந்து கஞ்சாவை டவுனுக்கு தனது லாரியில் கடத்தி தருகிறார் மோகன்லால்.

தன்னை துரத்தும் போலீசிடமிருந்து தப்பிக்கவும், புலியை கொன்ற வழக்கில் பாரஸ்ட் அதிகாரிகள் வழக்கில் இருந்து தப்பிக்கவும் பாலாவின் தந்தை ஜெகபதிபாபுவின் ஹெஸ்ட் ஹவுசிலேயே கொஞ்சநாள் தங்குகிறார் மோகன்லால். தம்பிக்கு வேலையும் கிடைக்கிறது.. ஆனால் சில நாட்களிலேயே அந்த கம்பெனியில் போதைப்பொருள் தான் தயாரிக்கிறார்கள் என்கிற உண்மை போலீஸார் மூலமாக மோகன்லாலுக்கு தெரிய வருகிறது..

அதற்கான ஆதாரங்களை போலீஸில் கொடுத்தால் அவரையும் அவரது தம்பியையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக போலீஸ் கூற, ஆதாரங்களை கைப்பற்றும் முயற்சியில் நடந்த களேபரத்தில் எதிர்பாரதவிதமாக பாலா கொல்லப்படுகிறார். சுற்றி வளைக்கும் போலீஸிடமிருந்து தப்புகிறார் ஜெகபதிபாபு..

மீண்டும் ஊருக்கு திரும்பும் மோகன்லாலுக்கு கிராமத்திற்குள் இன்னொரு புலி வந்து ஆட்களை தாக்கிய விஷயமும் தன்னை கொல்வதற்காக ஜெகபதிபாபு காட்டுக்குள் பதுங்கி இருக்கும் விஷயமும் தெரியவருகிறது.. இரண்டு எதிரிகளையும் எதிர்கொள்ள தனி ஆளாக காட்டுக்குள் செல்கிறார் மோகன்லால்.. முடிவு என்ன ஆனது..?

சாகசம் என்கிற ஒற்றை வார்த்தையில் சொன்னால் பொருத்தமாக இருக்கும். ‘புலி முருகன்’ கேரக்டரில் மோகன்லாலை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை.. 56 வயதில் மோகன்லால் செய்திருக்கும் சாகசங்களை இன்றைய இளம் நடிகர்கள் கூட செய்வார்களா என்பது சந்தேகம் தான். ஆக்சன் காட்சிகளில் அடி தூள் பண்ணுகிறார் மனிதர். குறிப்பாக புலிக்கும் அவருக்குமான சண்டை காட்சிகள் செம த்ரில்..

மோகன்லாலின் மனைவியாக நீண்ட நாளைக்குப்பிறகு கமாலினி முகர்ஜி.. காட்டுக்குள் வளர்ந்த வீரப்பெண்ணாக கணவனிடம் அன்பும் பொய்கோபமும் காட்டும் பெண்ணாக சரியான ஜோடியாக பொருந்தியுள்ளார். ஜெகபதிபாபு பணக்கார வில்லனாக வழக்கம்போல் மிரட்டுகிறார். அவரது மகனாக பாலாவுக்கு பாசிடிவ், நெகடிவ் இரண்டும் கலந்த கேரக்டர்.. சிறப்பாக செய்திருக்கிறார்..

மோகன்லாலை கண்டபோதெல்லாம் ரொமான்ஸ் லுக் விடும் நமீதா, மோகன்லாலின் பாச தம்பியான மணிகண்டன், மோகன்லாலின் மாமனாக வரும் லால், போலீஸ் அதிகாரி சித்திக், பாரஸ்ட் அதிகாரியாக வில்லன் முகம் காட்டும் கிஷோர், ஜெகபதிபாபுவின் வலது கையாக ஹரீஷ் பெராடி என படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் இயல்புத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஷாஜி குமாரின் கேமரா காடுகளின் பிரமாண்டத்தையும் அழகையும் அதில் ஒளிந்துள்ள ஆபத்தையும் அதன் குணாதிசயங்களோடு படமாக்கி இருக்கிறது. பின்னணி இசை, பாடல்கள், ‘முருகா முருகா புலி முருகா’ என தீம் பாடல் என படம் முழுவதும் நம்மை உற்சாக மூடிலேயே வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் கோபிசுந்தர்..

இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளுக்காகவே பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் தேசிய விருது வாங்கி இருக்கிறார் என்றால் ஆக்சன் காட்சிகளின் தரம் எப்படி இருக்கும் என தனியாக விவரிக்க தேவையில்லை.. புலியுடன் மோதும் காட்சிகளை இதுவரை வேறு இந்திய படங்களில் இவ்வளவு டீடெய்லாக நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கிஷோருடன் மோகன்லால் மோதும் சண்டைக்காட்சியாகட்டும், தனது லாரியை காதர் பாயிடம் இருந்து மீட்க இருபதுக்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் மோதுவதாகட்டும், க்ளைமாக்ஸில் காட்டுக்குள் நடைபெறும் கால்மணி நேர ரணகள சண்டைக்காட்சியாகட்டும் சண்டைப்பிரியர்களுக்கு செமத்தியான தீனி கொடுத்திருகிறார்கள் மோகன்லாலும் பீட்டர் ஹெய்னும்.

ஒரு மாஸ் ஹீரோ, காட்டில் உள்ள புலி என்கிற கதைக்களமே செமையாக இருக்கிறது. இந்தக்கதையில் சிரத்தை எடுத்து நடிக்க முன்வந்ததற்காகவே மோகன்லாலுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக ‘பாகுபலி-2’வுக்கு பிறகு இந்த ‘புலி முருகன்’ படம் இருக்கும் என்றால் அது மிகையில்லை.

இயக்குனர் வைசாக் இந்தப்படத்தை இயக்கியதை ஒரு தவம் போல செய்திருக்கிறார் என்பது படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெளிவாக தெரிகிறது..

மொத்தத்தில் இந்த புலி முருகன் ரசிகர்களை வசியம் பண்ணும் ஹைடெக் வேட்டைக்காரன் என்று சொல்லலாம்.

கங்க்ராட்ஸ் வைசாக்… ஹேட்ஸ் ஆப் மோகன்லால்..!