புலி – விமர்சனம்

குழந்தைகள் ரசித்து பார்க்கும், விரும்பி படிக்கும் காமிக்ஸ் ஏரியாவில் முதன்முதலாக கால் வைத்திருக்கிறார் விஜய்.

ஆற்று நீரில் அனாதையாக வரும் சிறுவன் விஜய்யை எடுத்து வளர்க்கிறார் பிரபு.. வளர்ந்து வாலிபனாகும் விஜய் தனது சிறுவயது தோழி ஸ்ருதிஹாசன் மீது காதல் கொள்கிறார். வேதாள உலகத்தினரின் ஆதிக்கத்தில் இருக்கும் அந்த கிராமம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. வேதாள உலகத்தின் ராணி ஸ்ரீதேவியோ, தளபதி சுதீப்பால் மந்திர வசியம் செய்யப்பட்டு அவர் சொல்படி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்.

இந்நிலையில் விஜய் இல்லாத நேரத்தில் ஊருக்குள் வரும் வேதாள வீரர்கள், தளபதி சுதீப்பின் ஆணைக்கிணங்கி பிரபுவை கொன்றுவிட்டு, ஸ்ருதிஹாசனை கடத்தி செல்கின்றனர். தன் காதலியை மீட்க சில பல மந்திர தந்திரங்களை பயன்படுத்தி வேதாள உலகத்திற்கு வரும் விஜய், அங்கு வந்தபின் தானும் வேதாள உலகத்தை சேர்ந்தவன் என நாடகமாடி ஸ்ரீதேவியையும் சுதீப்பையும் நம்பவைக்கிறார்.

ஆனால் பின்னர்தான் தெரிகிறது அந்த வேதாள உலகத்தின் இளவரசனே அவர்தான் என்றும், அவரது தந்தையும் தாயும், சுதீப்பின் நயவஞ்சகத்தால் கொல்லப்பட்டார்கள் என்பதும். வேதாள உலகத்தை ஆள நினைக்கும் சுதீப்பின் சதி திட்டத்தை முறியடித்து அவரிடமிருந்து ஸ்ருதியையும் நாட்டையும், ராணியையும் விஜய் எப்படி மீட்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

விஜய்க்கு இந்தப்படம் டோட்டல் சேஞ்ச் ஓவர் என்று சொல்லலாம்.. புதிய கதைக்களத்தில் அவர் தன்னை பொருத்திக்கொண்டாலும், தனது பழைய மேனரிசங்களையும் பஞ்ச்களையும் விட்டுவிடவில்லை.. கத்திச்சண்டை, சிறுத்தையுடன் மோதல், குள்ளர்களுடன் டான்ஸ் என நடிப்பில் புதிதாக வெரைட்டி காட்டியிருக்கிறார். விஜய்யின் அப்பா கேரக்டர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

விஜய்யுடன் காதல், டூயட் என தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஏரியாவிற்குள் கண்களுக்கு இதமாக பயணித்திருக்கிறார்கள் ஸ்ருதிஹாசனும், ஹன்சிகாவும்.. ராணியாக வரும் ஸ்ரீதேவி பயமுறுத்துகிறார் நடிப்பில் அல்ல.. மேக்கப்பில்.. சிலசமயம் க்ளோசப்பில்.. வில்லத்தனம் காட்ட முயற்சிக்கும் சுதீப்பிற்கு, கதை இன்னும் நன்கு ஒத்துழைத்து இருக்கலாமோ என்கிற எண்ணம் ஏற்படவே செய்கிறது..

ஊர் மக்களுக்காக ஒரு கையை இழந்து பரிதபாப்பட வைக்கிறார் பிரபு. இன்னொரு விஜய்யின் சஸ்பென்ஸ் என்ட்ரி அசத்தல் என்றால் அவரது மனைவியாக சில நிமிடம் மட்டுமே வந்து மனதில் நிற்கிறார் நந்திதா. தம்பிராமையா, சத்யன், இமான் அண்ணாச்சி, ரோபோசங்கர், வித்யுராமன் ஆகியோர் இந்த சித்திரக்கதையை ஓரளவு காமெடியுடன் நகர்த்த உதவியுள்ளார்கள்.

கருஞ்சிறுத்தை, ஒற்றைக்கண் மனிதன், சித்திரக்குள்ளர்கள் என சில கிராபிக்ஸ் வேலைகளும் ரசிக்கும்படி செய்யப்பட்டுள்ளன. கோட்டை கொத்தளங்கள் ஆர்ட் டைரக்டரின் ஒளிவுமறைவான பணியின் நேர்த்தியை பறைசாற்றுகிறது. நட்ராஜின் ஒளிப்பதிவு நம்மை கதை நிகழும் இடத்துக்கே அழைத்து செல்கிறது.. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் ஏண்டி ஏண்டி, ஜிங்கிலியா பாடல்கள் தாளம் போட வைக்கும் ரகம்..

விஜய்யை வைத்து இப்படி ராஜா ராணி, வேதாளம் என சித்திரக்கதையை படமாக்க முயற்சி செய்துள்ள சிம்புதேவனின் முயற்சியில் குறையொன்றுமில்லை.. குழந்தைகளை கவரக்கூடிய எல்லா அம்சமும் இந்த ‘புலி’யிடம் இருக்கின்றன.. இருந்தாலும் காட்சிகளில் இன்னும் விறுவிறுப்பையும் சற்று திகிலையும் கூட்டியிருந்தால் புலி சுணங்காமல் இன்னும் பல அடி தூரம் கூடுதலாக பாய்ந்திருக்கும்…

காமெடிதான் என்றாலும் ஆரம்ப காட்சியில் எதிரியின் காலை பிடித்து கெஞ்சுவதற்காகவா அவ்வளவு பில்டப் கொடுக்கவேண்டும்.. அது விஜய்யின் கேரக்டரை டேமேஜ் அல்லவா பண்ணிவிடுகிறது தவிர ஆரம்பம் முதல் கதையைவிட்டு விலகாமல் பயணித்துவிட்டு இறுதியில் சமகால அரசியலையும், அதற்கேற்ற வசனங்களையும் உள்ளே நுழைத்திருக்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வியும் எழவே செய்கிறது.