கூத்தன்’ பட டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர் புதிய முயற்சி..!

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கூத்தன்’. அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு பெரிய திரையுலக பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

வெங்கி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் படக் குழுவினர் முன்னிலையில் நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் மிகப் பிம்ரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் திலகம் கே.பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புதிய முறையில் தியேட்டர் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசினார் தயாரிப்பாளரான நீல்கிரிஸ் முருகன்.

“எந்த விஷயத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது மிகப் பெரிய விஷயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப் படமாக்கவும் டிக்கெட் முறையில் புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளேன்.

இதன்படி படத்தின் டிக்கெட்டுக்களை நானே என் நண்பர்கள் மூலமாகவும் என் நலம் விரும்பிகள் மூலமும் விற்பனை செய்யவுள்ளேன். இதறகு எனது நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். இந்த டிக்கெட்டை கொண்டு நீங்கள் தியேட்டருக்குச் சென்றால் ஒன்பது நாட்களில் எந்த தியேட்டருக்கு செல்கிறீர்களோ அந்தத் தியேட்டரில் இந்தப் படத்தின் டிக்கெட்டை தருவார்கள்.

டிக்கெட்டை நீங்கள் தமிழ் நாட்டில் எங்கு வாங்கினாலும் எந்த விலைக்கு வாங்கினாலும் அதிக டிக்கெட் விலையுள்ள தியேட்டருக்கு நீங்கள் சென்றாலும் இந்த டிக்கெட் செல்லும். தியேட்டர்காரர்களின் ஒத்துழைப்புடன்தான் இதை நான் ஆரம்பித்திருக்கிறேன்.

ஒரு சின்னப் படத்தை 5 லட்சம் பேர் பார்த்தால் அது ஹிட் படம். இந்த மேடையிலேயே என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவு டிக்கெட்டை விற்கிறேன். இதை அவர்கள் சந்தைப்படுத்துவார்கள். ஒவ்வொரு கட்டமாக இதை நடைமுறைப்படுத்துவேன்.

இதன் மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்து தியேட்டருக்கு அழைத்து வருவோம். மேலும் படத்தையும் மிகப் பெரிய ஹிட் படமாக ஆக்குவேன். இந்த முறை இனிமேல் எல்லோராலும் பின்பற்றப்படும்..” என்றார்.

ஒர்க் அவுட் ஆனால் சந்தோஷமே..