சிபிராஜின் ‘சத்யா’வுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த பிரபாஸ்..!

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யா’ திரைப்படம் வரும் டிச-8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தப்படம் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘ஷணம்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்தப்படத்தை ரீமேக் செய்து தயாரிக்க மூலகாரணம் யார் என்பது குறித்து சத்யராஜ் பேசும்போது, “நான் பாகுபலி படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார்.

நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் “ஷணம்“ நல்ல படம் எதற்காக கேட்குறீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று பிரபாஸ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம்” என்றார் சத்யராஜ்..

இன்னொரு ஆச்சர்யமான விஷயத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். “ரீமேக் ரைட்ஸை வாங்கிவிட்டேனே தவிர, நான் சத்யா படத்தின் படப்பிடிப்பு துவங்கி பத்து நாள் கழித்து தான் ஷணம் படத்தை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது மிகச்சிறந்த நடிகர் பட்டாளத்துடன் சத்யா திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ பட டைட்டில் இது. அந்த டைட்டிலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும்” என்றார் சத்யராஜ்.