ப.பாண்டி – விமர்சனம்

power-pandi review 1

ஒருகாலத்தில் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் பவர் பாண்டி.. மனைவி உயிரோடு இல்லாவிட்டாலும் மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் என சந்தோஷமாக இருக்கிறார்.. இருந்தாலும் மனதுக்குள் என்னவோ ஒரு சின்ன குறை.. அவ்வப்போது ஊருக்கு நல்லது செய்கிறேன் என இவர் செய்யும் செயல்களால் பிரச்சனைகள் வீடுதேடி வருகின்றன.. இதனால் அவரது பாசமகன் கொஞ்சம் கடுகடு முகம் காட்டுகிறான்.

இதன் தொடர்ச்சியாக’ வீட்டிற்கு நாம் பாரமாக இல்ல்லாமல், தன் கடைசிக்கால வாழ்க்கையை தனக்காகவே வாழவேண்டும் என முடிவெடுக்கிறார் பவர் பாண்டி, ஒரு கடிதம் மட்டும் எழுதிவைத்துவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு மனம் போன போக்கில் இலக்கில்லாமல் கிளம்புகிறார்.. வழியில் சந்திக்கும் இவரது வயதை ஒத்த சில ஜாலி வழிப்போக்கர்கள் சிலர் இவர் கதையை கேட்கின்றனர்..

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பவர் பாண்டியின் இளமைக்காலத்தில் அவருக்குள் இருந்த கபடி வீரனைப்பற்றியும் பூந்தென்றல் என்கிற பெண்ணுடன் ஏற்பட்டு நிறைவேறாமல் போன காதல் பற்றியும் அவர்களுக்கு தெரியவருகிறது. இப்போது அறுபது வயதுக்கு மேல் இருக்கும் அந்த பெண்ணை தேடி உங்கள் பயணத்தை தொடருங்கள் என பவர் பாண்டிக்கு புது இலக்கை நிர்ணயித்து உற்சாகப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர்..

பவர் பாண்டி தனது முன்னாள் காதலியை கண்டுபிடித்தாரா..? இல்லை குடும்பத்துக்காக சமரசம் ஆகி ஊர் திரும்பினாரா..? இதெல்லாம் மீதிக்கதை..

தனுஷ் முதன்முதலாக டைரக்சனில் இறங்கி இருக்கும் படம் என்பதும் அதில் ராஜ்கிரண் தான் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வந்தன.. அந்தவிதமாக ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட ஒரு படத்தைத்தான் தனுஷ் இயக்கியிருக்கிறார்.

குறிப்பாக பேரன் பேத்தி எடுத்து தாத்தா ஆனவர்கள் கடைசிவரை அவர்களது மகன் வாழ்க்கையையோ, அல்லது பேரன்களின் வாழ்க்கையையோ தான் வாழ்கின்றார்கள்.. அவர்களுக்கான கடைசிக்கால வாழ்க்கை எங்கே தொலைந்து போனது என்பதை ராஜ்கிரணின் பவர் பாண்டி கதாபாத்திரம் வாயிலாக உயிரோட்டமாக உலவ விட்டுள்ளார்..

‘மஞ்சப்பை’யில் யதார்த்த கிராமத்து தாத்தாவாக வந்த ராஜ்கிரண், இதில் யூ டர்ன் அடித்து அப்படியே நேரெதிரான நகரத்து தாத்தாவாக மாறியிருக்கிறார். மகன் மற்றும் குடும்பத்தினருடன் பழகும் பாச முகம், தனது காதலியை தேடி செல்லும் இளைஞனின் மனநிலை கொண்ட உற்சாக முகம் என இரண்டுவித பரிமாணங்களை வெளிப்படுத்தி பவர் பாண்டி கேரக்டருக்கு தான் சரியான தேர்வுதான் என காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார்.

பிளாஸ்பேக் காட்சிகளில் இருபது நிமிடம் மட்டுமே சிறப்பு தோற்றத்தில் வந்து ஆச்சர்யப்படுத்துகிறார் தனுஷ்.. ஒரு கிராமத்து வெள்ளந்தி இளைஞனாக இந்தப்படத்தில் தனுஷ் எப்படி இருப்பார் என நீங்கள் எதிர்பார்த்து போகிறீர்களோ, அதேபோலத்தான் இருக்கிறார் தோற்றத்திலும் நடிப்பிலும்…

தனுஷுக்கு ஜோடியாக மதுரை கிராமத்து பெண்ணாக எந்நேரமும் கண்களில் காதலை தேக்கி வைத்திருக்கும் மடோனாவும் நம் மனதில் நிற்கும் கதாபாத்திரம் தான். ஆனால் நிகழ்காலத்தில் இப்போது வயதான பூந்தென்றலாக வரும் ரேவதி மடோனாவை ஓவர்டேக் செய்கிறார்.. அவருக்கும் ராஜ்கிரணுக்குமான குறும்பு நிமிடங்கள் சின்னச்சின்ன ஹைகூக்கள்.

இன்னொரு நாயகனாக பிரசன்னா.. அப்பா மீது பாசம், அதேசமயம் அவரது செயல்களால் இயல்பாகவே ஏற்படும் கோபம் இரண்டையும் சரியாக பிரதிபலித்திருக்கிறார்.. அவரது மனைவியாக பாந்தமான மருமகளாக சாயாசிங் பொருத்தமான, நிறைவான கேரக்டர்.. அவர்களது அந்த சுட்டிக்குழந்தைகள் துருவ், சாஷா இருவரும் செம க்யூட்.. காமெடிக்கு வித்யூ, கடைசி நேர சர்ப்ரைசாக விஜய் டிவி டிடி, ராஜ்கிரணிடம் சரிக்கு சமமாக வாயடிக்கும் பீர் பார்ட்டி இளைஞன் வருணாக நடித்துள்ள ரின்சன் படத்தை தாங்கும் மற்ற அடிவிழுதுகள்..

ரோபோ சங்கர் – கௌதம் மேனன் காமெடி ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா போனஸ்.. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மனதை வருடிப்போக முயற்சிக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவு, டைரக்டர் தனுஷுக்கு ஏற்ற ஒத்துழைப்பை தந்துள்ளது.

ஆக்சன் படம் தான் எடுப்பேன், கமர்ஷியல் விஷயங்களை உள்ளே புகுத்துவேன் என எந்த அட்ராசிட்டியும் இல்லாமல் ஒரு வயதான மனிதனின் உணர்வுகளை மையப்படுத்தி, அவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எந்தவித பாசாங்கு இல்லாமல் சொன்ன விதத்தில் இயக்குனராக தனுஷ் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.

நிச்சயம் இளசுகள் தங்கள் குடும்பங்களுடன் பார்க்கவேண்டிய படம் இது