பூஜை – விமர்சனம்

 

பொள்ளாச்சியில் கோவில் தர்மகர்த்தா என்கிற போர்வையில் சொந்தமாக கூலிப்படையை வைத்து கொலைசெய்பவர் ரவுடி முகேஷ் திவாரி. கோவை குரூப் கம்பெனிகளின் கோடீஸ்வர வாரிசு விஷால். போலீஸ் அதிகாரியான சத்யராஜை போட்டுத்தள்ள நினைக்கும் அவரது திட்டம் யாரென்றே தெரியாத விஷால் மூலம் முறியடிக்கப்படுகிறது. தடுத்த ஆள் யாரென்று கோபமாக தேடுகிறார் முகேஷ் திவாரி.

இன்னொரு பக்கம் கோவிலுக்கு வந்த தனது சித்தப்பாவை அனைவர் முன்னிலையில் தனது ஆளை விட்டு அடித்துவிட்டார் என்பதற்காக இரண்டு முறை முகேஷ் திவாரியை அடித்து அவமானப்படுத்துகிறார் விஷால். தான் தேடும் ஆள் தான், தன்னை அடித்தவன் என்பது வில்லனுக்கு தெரியவர, அடிபட்ட பாம்பும் சினம் கொண்ட சிறுத்தையும் மோதினால் என்ன ஆகும்..? பதில் சொல்கிறது ‘பூஜை’..

கோபக்கார இளைஞனா கூப்பிடு விஷாலை என்கிற அளவுக்கு விஷாலின் நடிப்பில் அவ்வளவு உக்கிரம்.. எதிரிகளை அடிக்கின்ற ஒவ்வொரு அடியும் நம் மீது விழுகின்ற மாதிரியே தோன்றுகிறது. ஸ்ருதியுடன் நட்புக்காதல், சூரியுடன் மார்க்கெட்டில் கலாட்டா காமெடி, கோபக்கார அம்மாவிடம் பணிவு, ஸ்கெட்ச் போட்டு எதிரிகளின் வியூகத்தை உடைக்கும் அதிரடி என இயக்குனர் ஹரியின் ஆக்ஷன் ஹீரோவுக்கு முழு உருவம் கொடுத்திருக்கிறார் விஷால்.

கோவையில் இருக்கும் மாடர்ன் கேர்ள் எப்படி இருப்பார் என கற்பனை பண்ணிப்பாருங்கள்.. அதுதான் ஸ்ருதிஹாசன்.. நட்பாக பழகினாலும் விஷால் காதலை சொன்னதும் முதலில் ஸ்டேட்டஸ் பார்ப்பதும் பின் அவர் மீது காதல் வயப்படுவதும் என தன பங்கிற்கு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி விடுகிறார்.

மொட்டைத்தலையுடன் அதிரடியான போலீஸ் அதிகாரியாக வலம் வரும் சத்யராஜ், க்ளைமாக்ஸில் விஷாலிடம் “பொணத்தை சுட வச்சிட்டியேப்பா” என்பது அவரது ட்ரேட் மார்க் நக்கல். ஒவ்வொருத்தரிடமும் அடிவாங்கிவிட்டு அவர்களிடமே எதுவும் தெரியாததுபோல டீசன்ட் டாக் விடும் சூரியும், கூடவே பிளாக் பாண்டியும் படம் முழுக்க ஒலைப்பட்டாசாய் வெடிக்கின்றனர்.

கூலிப்படை தலைவானாக படம் முழுவதும் கொந்தளிக்கும் கேரக்டரில் முகேஷ் திவாரி ‘நச்’. தப்பு செய்துவிட்டான் என்பதற்காக மகனையே ஒதுக்கிவைக்கும் ராதிகா, குடும்பத்தலைவனாக ஜெயபிரகாஷ் இருவருக்கு மட்டும் இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டத்தில் நடிக்க எக்ஸ்ட்ரா ஏரியா கிடைத்திக்கிறது.

ஹரியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, ஒவ்வொரு காட்சியிலும் வானத்தில் பறந்துகொண்டு தலைகீழாக பூமியை பார்க்கும் புது உணர்வை நமக்கு தருகிறது ப்ரியனின் ஒளிப்பதிவு.. யுவனின் இசை பாடல்களில் அடக்கி வாசித்து ஆக்ஷன் பிளாக்கில் தடதடக்கிறது.

க்ளைமாக்சில் பீகாரில் நடக்கும் க்ளைமாக்ஸ், சிங்கம் படத்தை நினைவுபடுத்துகிறது.. அதுபோலவே படத்தின் இன்னும் சில காட்சிகளும். ஆனாலும் இரண்டரை மணி நேர நான்ஸ்டாப் பொழுதுபோக்கிற்கு ‘பூஜை’ கேரண்டி தருகிறது. தன் படம் என்றால் நம்பி வரலாம் என்பதை இந்தப்படத்தில் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் ஹரி.