பொங்கல் ரிலீஸாக ‘டார்லிங்’..! வழிவிட்ட ‘கொம்பன்’..!

 

விஷால் நடித்துள்ள ‘ஆம்பள’ படத்திற்கு மட்டும் போஸ்டர் அடித்தே ஒட்டிவிட்டார்கள் பொங்கல் ரிலீஸ் என்று. அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஜன-29க்கு தள்ளிப்போக, ஷங்கர்-விக்ரம் கூட்டணியின் ‘ஐ’ இப்போதும் பொங்கல் ரிலீஸ் தான் என சொல்லப்பட்டு வருகிறது. ஆக, கிடைத்த கேப்பில் கிடா வெட்டுவதுதானே புத்திசாலித்தனம்..

அதைத்தான் இப்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செய்ய இருக்கிறது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக முன்னாடி சொல்லப்பட்டாலும், கார்த்தியின் ‘கொம்பன்’ படத்தில் இன்னும் கொஞ்சம் வேலைகள் பாக்கி இருப்பதால், அந்த குறையை ஈடுசெய்யும் விதமாக, ஏற்கனவே தயாராக உள்ள தங்களது இன்னொரு தயாரிப்பான, ‘டார்லிங்’கை பொங்கலுக்கு வெளியிட முடிவுசெய்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா..

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் அவர் இரண்டாவதாக நடிக்க ஆரம்பித்தது என்றாலும், பந்திக்கு முந்திக்கொண்டு வருகிறது. ஜி.வி பிரகாஷ் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். கருணாஸ், ‘மேகா’வில் கதாநாயகியாக நடித்த சிருஷ்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

தெலுங்கில் வெளியான ஷாக் த்ரில்லரான ‘பிரேமகதா சித்தரம்’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘டார்லிங்’. தெலுங்கில் இயக்கிய ஷாம் ஆண்டனே தமிழிலும் இயக்கியுள்ளார். நடிப்பதோடு ஜி.வி.பிரகாஷே இசையும் அமைத்துள்ள இந்தப்படத்தை ட்ரீம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.