பொதுவாக எம்மனசு தங்கம் – விமர்சனம்

இரண்டு ஊருக்கும் பொதுவான குலசாமி.. அந்த கோயிலில் தனது மகளுக்கு காதுகுத்தும்போது ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால், அவமானப்படுகிறார் பக்கத்து ஊர்க்காரரான பார்த்திபன்.. அதனால் அந்த ஊர் மக்களில் பலரை கொஞ்சம் கொஞ்சமாக நைச்சியமாக பேசி, வெளியூரில் சென்று வம குடும்பமாக அனுப்பி வைக்கிறார்… மக்கள் தொகை குறைய ஆரம்பிக்கவே, அதை சாக்காக வைத்து அரசின் திட்டங்களை எல்லாம் அந்த ஊருக்கு போகவிடாமல் தடுத்து, தனது ஊருக்கு வரவழைக்கிறார் பார்த்திபன். குறிப்பாக மற்றவர்கள் தன்னைவிட புகழ்பெறுவது பார்த்திபனுக்கு சுத்தமாக ஆகாது.

இந்தநிலையில் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் தங்கள் ஊருக்கு வராமல் போகவே தனது ஊரையும் நல்லபடியாக மாற்ற முயலும் உதயநிதி, நண்பன் சூரியுடன் சேர்ந்து ஊர் மக்களின் நல்லதுக்காக சின்னச்சின்ன வேலைகள் செய்கிறார். ஆனால் அதை செய்யும் விதத்திற்காக ஊர் பஞ்சாயத்தில் கெட்ட பெயரை சம்பாதிக்கிறார். இந்தநிலையில் பார்த்திபனின் தங்கையை ஏழை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதையும், அதன் காரணமாக தனது தங்கை வசிக்கும் ஊர் என்பதால் தனது சொந்தப்பணத்தை செலவழித்து அந்த ஊருக்கு பார்த்திபன் வசதிகள் செய்து கொடுத்ததும் உதயநிதிக்கு தெரிய வருகிறது.

அதனால் பார்த்திபன் மகளாகிய நிவேதாவை தான் திருமணம் செய்துகொண்டால், தனது ஊருக்கும் அதே வசதிகள் கிடைக்குமே என நினைத்த உதயநிதி, நிவேதாவை கொஞ்சம் கொஞ்சமாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார். காதலுக்கு பார்த்திபன் எதிரி இல்லை என்றாலும் கூட, உதயநிதி தன்னைவிட புகழும் பெயரும் பெற்றுவிடுவார் என்பதால் அவரை ஊரை விட்டு அனுப்புவதற்கும், தனது மகளை அவரிடமிருந்து பிரிப்பதற்குமான வேலைகளில் இறங்குகிறார் பார்த்திபன்…

இருவருக்குமான இந்த ‘புகழ்’ போட்டியில் மாறிமாறி இருவரின் கையும் ஓங்குகிறது… ஆனால் ஒருகட்டத்தில் தனது ஊருக்காகவே தனது காதலை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார் உதயநிதி. முடிவில் ஜெயம் யாருக்கு என்பது தான் க்ளைமாக்ஸ்.

இதுவரை நகரத்து இளைஞனாகவே வலம்வந்துகொண்டிருந்த உதயநிதி பக்கா கிராமத்து இளைஞனாக உருமாறி இருக்கிறார். முறுக்கு மீசையுடன், அவரது படி லாங்குவேஜும் இதில் டோட்டலாக மாறி இருக்கிறது. தனது கிராமத்துக்கு நல்லது செய்வதற்காக சூரியுடன் அவர் சேர்ந்து அடிக்கும் கலாட்டாக்கள் செம அலப்பறை. பார்த்திபனுக்கும் அவருக்குமான மோதலை வெகு நாகரிகமாக கையாளும் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார் உதயநிதி.

எந்த முக்கியத்துவமும் குறையாமல் இன்னொரு ஹீரோ ரேஞ்சிற்கு, டீசன்ட்டான வில்லனாக வரும் பார்த்திபன் படத்தில் கலகலப்பிற்கான பொறுப்பில் பாதி பங்கை எடுத்துக்கொள்கிறார். யாருக்கும் பாதிப்பில்லாமல் இப்படியும் வில்லத்தனம் பண்ண முடியும் பார்த்திபனின் கேரக்டர் மூலமாக ஒரு புது அத்தியாயம் எழுதியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தளபதி பிரபு.

கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ்.. சராசரி கிராமத்துப்பெண் வேடத்தில் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். பார்த்திபன் இருக்கும்போது சூரி என்ன பண்ண முடியும் என நம்மை யோசிக்க விடாமல் பார்த்திபனையே அடிக்கடி கலாய்த்து செம அப்ளாஸ் அள்ளுகிறார் சூரி. பார்த்திபன் உதயநிதியிடம் பேசும்போது, ‘ஒரு காரை ஒன்பது காரா ஆக்கு.. நாலுபேருக்கு வேலை கொடு” என ஒரு புளோவில் அட்வைஸ் பண்ண, “அப்போ மீதி அஞ்சு கார் ட்ரைவர் இல்லாம சும்மா நிக்குமே” என பார்த்திபனுக்கே ரிவீட்டை திருப்புவது திருநெல்வேலிக்கே கொடுத்த அல்வா..

ரொம்ப நாட்கள் கழித்து ஒரு படம் முழுவதும் வரும் கேரக்டராக மயில்சாமியை பார்க்க முடிவது ஆச்சர்யம் பிளஸ் ஆனந்தம். பார்த்திபனின் ட்ரைவராக படம் முழுவதும் கொடுத்த வாய்ப்பை சோடையில்லாமல் பயன்படுத்தி இருக்கிறார் மனிதர். ‘மொட்ட ராஜேந்திரன்’ ஒரு காட்சியில் மட்டுமே வருவது கொஞ்சம் ஏமாற்றம் தான். பஞ்சாயத்து தலைவராக வருபவரை பழைய விஜயகாந்த் படங்களில் எல்லாம் பார்த்திருக்கிறோமே. செமையாக செட்டாகி இருக்கிறார்.. விவேக் பிரசன்னா, உதயநிதியின் அம்மாவாக ரமா, நமோ நாராயணன், சன் டிவி பெரைரா உட்பட இன்னும் சிலரும் சரியான தேர்வென நிரூபிக்கிறார்கள்.

இமானின் இசையில் இதிலும் இரண்டு பாடல்கள் ஹிட்டாகும் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. சூர்யாவின் ஒளிப்பதிவில் நூறு சதவீத கிராமத்து நேர்த்தி. இரண்டு கிராமங்களுக்கு இடையேயான குலசாமி பங்கீடு விஷயத்தை, எந்தவித கலவரமும் இல்லாமல் மிக அழகாக கையாண்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குனர் தளபதி பிரபு. குறிப்பாக பார்த்திபனின் கேரக்டரை அவர் வடிவமைத்த விதமும், வில்லத்தனத்தை இப்படி பாசிட்டிவாகவும் பண்ணலாம் என காட்டிய விதமும் அவரது ‘மாத்தி யோசி’ சிந்தனையை தெளிவாக காட்டியுள்ளது.

மொத்தத்தில் கலகலப்பான பொழுதுபோக்கு படம் என்கிற முத்திரையை இந்தப்படத்தின் மீது அழுத்தமாக குத்தலாம்.