“‘எங்களுக்கு செமினார் எடுங்க ராஜமவுலி சார்” – பாகுபலியை தூக்கி பிடிக்கும் சூர்யா..!

 

தென்னிந்திய திரையுலகத்தோடு பாலிவுட்டும் சேர்ந்து ஆவலுடன் ஒரு படத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது நிச்சயமாக எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் மூன்றாண்டுகளாக உருவாகிவரும் ‘பாகுபலி’ படத்தைத்தான். காரணம் அதற்கு முந்தைய அவரது படைப்புகளான ‘மகதீரா’வும் ‘நான் ஈ’யும் ஏற்படுத்திவிட்டுப்போன தாக்கம் அப்படி.

ஒருவழியாக தனது கனவு படைப்பை கேமராவில் சுருட்டி எடுத்துவிட்ட ராஜமவுலி, சமீபத்தில் தெலுங்கில் வெளியிட்ட அதன் ட்ரெய்லரே ரசிகர்கள் பலரின் தூக்கத்தை கெடுத்துவிட்டது. இந்த மனிதர் என்னதான் எடுத்திருப்பார் என்கிற ஆவல் இன்று தமிழில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது இருமடங்காக மாறிவிட்டது. படத்திற்கு இசையமைத்துள்ளவர் மரகதமணி.

விழாவில் முதல் ஆளாக பேசிய சத்யராஜ், “நகைச்சுவைக்கு, சோகத்திற்கு, கைதட்டலுக்கு, சிந்திப்பதற்கு என ஒவ்வொரு ரகத்திலும் இதுவரை நிறைய படங்கள் வந்துள்ளன.. ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ‘ஆ’வென வாயை பிளந்தபடி பார்க்கவைக்கும் ஒரு படம் என்றால் அது இந்த ‘பாகுபலி’யாக மட்டும் தான் இருக்கும்” என்றார்.

இந்தப்படத்தில் பாடல்களுடன் வசனத்தையும் எழுதியுள்ளார் மதன் கார்க்கி. வரலாற்றுப்படம் என்பதால் அவர் நான்குவிதமான தமிழ்நடையில் வசனம் எழுதித்தர, இதைப்பற்றி சத்யராஜிடம் ஆலோசனை கேட்கப்போனால் அவரோ இன்னும் நாக்கு விதமான தமிழ்நடைகளை எடுத்து வைக்க, நாசரும் தனது பங்கிற்கு இரண்டுவிதமான தமிழ் வசன உச்சரிப்புகளை தூக்கிப்போட, இது என்னடா வம்பா போச்சு என ஸ்தம்பித்து விட்டாராம் ராஜமவுலி.. ஒருவழியாக குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவந்தாராம் மதன் கார்க்கி.

படத்தில் வில்லனாக நடித்துள்ளார் ராணா. அவரை தூண்டிவிட்டு வெறியேற்றும் வேலையை கூடவே இருந்து செய்யும் ‘சகுனி’ தான் நாசர். ராஜமாதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் வில்லிமுகம் காட்ட, அனுதாப முகம் காட்டியுள்ளார் ரோகிணி.

அனுஷ்கா, தமன்னா என இரண்டு கதாநாயகிகளில் இருவருக்குமே சம அளவு முக்கியத்துவம் உள்ள வேடம் தான்.  தமன்னா இதுபற்றி சொல்லும்போது, “இந்தப்படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்து நான் உள்ளே நுழைந்தபோது படத்தின் ஷட்டிங் 15௦ நாட்கள் முடிந்திருந்தது. என்ன ரோல் பண்ணப்போறோம்னு கூட தெரியாது. இப்ப நான் ஒரு புதுமுகமாகத்தான் நடிச்சிருக்கேன்” என்றார்.

மேலும் ஹீரோ பிரபாஸ் பற்றி குறிப்பிடும்போது அவர் ஒரு ரியல் ஹீரோ என கூறினார் தமன்னா.. “நான் கீழே இருந்து பாக்குறப்ப 5௦ அடி உயரத்துல இருக்குற பில்டிங் மேல நின்னுக்கிட்டு அது பத்தின பயம் எதையும் முகத்துல காட்டாம, அவ்வளவு தத்ரூபமா ரியாக்சன் கொடுத்தார்.. எனக்கு கூட ஒரு சோலோ பைட் இருக்கு. அதுக்கும் பிரபாஸ் ஹெல்ப் பண்ணினார்” என்றார் தமன்னா.

“பத்து வருஷத்துக்கு முன்னாடி மூணு பிளாப் கொடுத்துட்டு முழிச்சுட்டு உக்கார்ந்திருப்ப என்னை கூப்பிட்டு ‘சத்ரபதி’ன்னு ஹிட் கொடுத்து என்னை நிமிர்ந்து உக்கார வச்சார். இப்பக்கூட வரிசையா நாலு பிளாப் கொடுத்துட்டு நின்னப்பத்தான் நானே நெனச்சு பார்க்கமுடியாத அளவுக்கு இந்த ‘பாகுபலி’யை கொடுத்திருக்கார்” என நெகிழ்ந்தார் பிரபாஸ்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 380 நாட்கள் நடைபெற்றுள்ளதாம். இதில் பிரபாஸ் 3௦௦ நாட்கள் நடித்துள்ளார். அதில் கிட்டத்தட்ட 22௦ நாட்கள் சண்டைக்காட்சிகள் தான் படமாக்கப்பட்டதாம்.

“இது கனவு அல்ல.. இதுதான் என் உலகம்.. இதில் தான் நான் வாழ்ந்து வருகிறேன்” என படத்தின் இயக்குனர் ராஜமவுலி சொன்னபோது, அதை மறுத்து நம்மால் யோசிக்கவே முடியவில்லை. டீசரிலேயே அவரது உழைப்பு எத்தகையது என்பது தான் தெளிவாக தெரிந்துவிட்டதே..

“ராஜா காலத்து கதையை சின்னவயசுல இருந்தே படிச்சு பழகுனதால, அப்படி ஒரு படம் எடுக்கனும்னு இயல்பாவே ஆசை இருந்துச்சு. முதல்படத்துலேயே அப்படி யாராவது நம்பி பணம் போடுவாங்களா..? நாலஞ்சு படம் பண்ண பின்னாடி ஒரு படத்துல லைட்டா பண்ணினேன்.. அப்புறம் மகதீராவுல முக்கால் மணி நேர பிளாஸ்பேக் வச்சேன்.. இப்ப தயாரிப்பாளர்களுக்கு எம்மேல நம்பிக்கை வந்துருச்சு.. அதுதான் துணிஞ்சு இறங்கிட்டேன்” என பாகுபலி உருவான கதையை சொன்ன ராஜமவுலி, அது உருவான விதத்தையும் சொல்லி பிரமிப்பில் ஆழ்த்தினார்.

“என்னை பொறுத்தவரை ராமரை விட ராவணன் பலமானவனா இருக்கணும்.. அப்படிப்பட்டவனை ஜெயிக்கிறது தான் ராமருக்கு அழகு. அதனால தான் என் படத்துல வில்லன்களுக்கு சம அளவு பங்கு தர்றேன்.. ஹீரோவா நடிச்சுட்டு இருக்குற ராணா இந்தப்படத்துல வில்லனா நடிக்க ஒத்துக்கிட்டு இருக்கார்னா அதுக்கான மரியாதைய இந்தப்படம் அவருக்கு கொடுக்கும்” என்றார் ராஜமவுலி..

சர்ப்ரைஸ் விசிட்டாக பாகுபலி டீமை வாழ்த்துவதற்காக வந்திருந்தார் சூர்யா.. முத்தாய்ப்பாக அவர் பேசும்போது, “பாகுபலியில் எப்படியும் ஏதாவது ஒரு விதத்தில் நானும் பங்கு பெறவேண்டும் என நினைத்தேன்.. இதோ இந்த விழாவில் கலந்துகொண்டது மூலம் அதுவும் நிறைவேறிவிட்டது.. அது போதும்” என்றவர் ராஜமவுலிக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.

“சார் உங்க கிட்ட இருந்து பல விஷயங்கள கத்துக்க எங்க டைரக்டர்ஸ் பலர் ஆர்வமா இருக்காங்க.. இங்கேயும் உங்களை மாதிரி படைப்புகள் நிறைய உருவாகிறதுக்கு, அவங்களுக்காக நீங்க தயவுசெய்து ஒரு செமினார் ஒன்னு நடத்தனும்” என்றார் சூர்யா.

‘பாகுபலி’ கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிருச்சு…!