“பிங்க்” ரீமேக்கை இயக்க ஹெச்.வினோத் தான் சரியான நபர்” – போனி கபூர் புகழாரம்..!

தயாரிப்பாளர் போனி கபூர் பாலிவுட்டில் வணிக ரீதியிலான மற்றும் கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பாளராக 37 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். அஜித் படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் போனி கபூர்.

விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்த பிங்க் இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் படத்தின் மூலம் பாராட்டுக்களை குவித்த ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள். இந்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.

இந்த நிகழ்வில் பேசிய போனி கபூர், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றியபோது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டார்.

தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். அஜித் என் மனைவி ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நானும் அஜித்தும் ஒரு படத்தில் இணைய மிகுந்த ஈடுபாட்டுடன் காத்திருந்தோம். நாங்கள் இருவருமே எங்கள் இருவரது கேரியரிலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பொருத்தமான கதையை தேடினோம். ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இன்று படப்பிடிப்பை துவக்கி, 2019ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகின்றன. அவருடன் பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

இயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பின்பற்றி வருகிறேன், மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனித்துவமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை தனது சிறந்த கதை சொல்லல் மூலம் சிறப்பாக செய்யும் அவர் தான் தமிழ் மொழியில் ‘பிங்க்’ படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறினார் போனி கபூர்..

ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் திரைப்படத்துறையின் மீதான இவரது ஆர்வம் தான் சிறந்த தமிழ் படங்களை இந்திக்கு எடுத்து செல்ல தூண்டுதலாக இருந்தது. அவரது புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு பயணம் சூப்பர் டூப்பர் ‘ஹம் பாஞ்ச்’ தொடங்கி, உணர்ச்சிப்பூர்வமான ‘மாம்’ படம் வரை வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளராக அவரது பயணம் பல தசாப்தங்களை, பல்வேறு வகையான திரைப்படங்களையும் கடந்து வெற்றிகரமான வந்துள்ளது. மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை கவர்ந்த, அவரின் ‘மிஸ்டர் இந்தியா’ என்ற ஃபேண்டஸி திரைப்படம் இன்றும் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது.