பிச்சுவாகத்தி – விமர்சனம்

கிராமத்து இளைஞர்களாக வெட்டியாய் பொழுதுபோக்கும் இனிகோ பிரபாகர், ரமேஷ் திலக், யோகிபாபு மூவரும் சிறிய திருட்டு வழக்கில் சிக்கியதால், கும்பகோணம் ஸ்டேஷனில் ஒரு மாதம் தினசரி கையெழுத்து போடவேண்டும் என தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் கும்பகோணம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜ், இவர்களிடம் லஞ்சமாக பணம் கேட்பதுடன், உள்ளூர் ரவுடி ஆர்.என்.ஆர் மனோகர் சொலும் திருட்டு, அடிதடி வேலைகளை செய்யச்சொல்கிறார்.. ஒருமாதம் கழித்து அவர்களால் இதிலிருந்து விடுபட முடிந்ததா..? இல்லை இதே தொழிலை தொடர்ந்தார்களா..? என்பது க்ளைமாக்ஸ்.

வேலைவெட்டிக்கு போகாமல், தண்ணியடித்துக்கொண்டு ஜாலியாக சுற்றும் இளைஞர்கள் கேரக்டர்களில் இனிகோ, ரமேஷ் திலக், யோகிபாபு டீம் கரெக்ட்டாக செட்டாகி இருக்கிறது. யோகிபாபு காட்சிக்கு காட்சி சிரிப்பு வெடிகளை கொளுத்தி போடுகிறார். கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா.. காதல் காட்சிகளில் குறும்பை காட்டும் அதே சமயம், சோக காட்சிகளில் மனதை கசியவும் வைக்கிறார்

படத்தில் இன்னொரு ஜோடியாக வரும் செங்குட்டுவன்-அனிஷா கேரக்டர்கள் படம் முழுதும் நம்மை சோதிக்கின்றனர்.. பாலசரவணனின் காமெடி பரவாயில்லை. காளி வெங்கட் ஜஸ்ட் லைக் தட் வந்துபோகிறார் அவ்வளவுதான்..

கெட்ட போலீஸ் அதிகாரி போல, நிஜ போலீஸ்காரராகவே மாறிவிட்டர் சேரன் ராஜ், ரவுடி தலைவராக வழக்கம்போல் ஆர்.என்.ஆர்.மனோகர் மிரட்டலான நடிப்பு. எதிரிகளுக்கு வில்லனாக வந்தாலும் கலகலப்பூட்டுகிறார் நான் கடவுள் ராஜேந்திரன்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். சுபாவத்தில் நல்லவர்களாக இருக்கும் நண்பர்கள் மூவரும் சூழ்நிலைக்காக திருடுவதை நாம் ஒப்புக்கொண்டாலும், அதன்பின் அவர்கள் ரவுடிகளாக மாறுவது ஏற்புடையதாக இல்லை..

ரெகுலர் செயின் திருடர்களாக இருந்தால் தங்களை மாட்டிவிட்ட பெண்ணை பழிவாங்கும் எண்ணம் தலைதூக்குவது இயல்பு.. நல்லவர்களாக இருக்கும் இவர்கள் நகை வழக்கில் தங்களை சிக்கவைத்த அப்பாவி பெண்ணை கொலைசெய்யும் எண்ணத்துடன் துரத்துவதை எல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை.

கதாபத்திர வடிவமைப்பை இன்னும் கொஞ்சம் கவனமாக கையாண்டிருந்தால் பிச்சுவாகத்தி நம் மனதில் ஆழமாக இறங்கியிருக்கும்.