பிச்சைக்காரன் – விமர்சனம்

தனது தாய் உயிர்பிழைக்க வேண்டும் என்பதற்காக பிச்சைக்காரனாக மாறும் ஒரு கோடீஸ்வரனின் கதைதான் இந்தப்படம்..

வெளிநாட்டில் படித்துவிட்டு கோவைக்கு வரும் விஜய் ஆண்டனி தங்களது கம்பெனி பொறுப்புகளை அம்மாவிடம் இருந்து தான் ஏற்றுக்கொள்கிறார். அந்த சமயம் அவரது அம்மா, விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறார்., தாய் உயிர்பிழைக்க வேண்டும் என்பதற்காக, சாமியார் ஒருவரின் வழிகாட்டுதலின்படி 48 நாட்கள் தனது சுய அடையாளம் மறைத்து சென்னைக்கு வந்து பிச்சைக்காரனாக மாறி பிச்சை எடுக்கிறார்.

மெல்ல மெல்ல பிச்சை எடுக்கும் வாழ்க்கைக்கு பழகும் விஜய் ஆண்டனிக்கு ஒரு பக்கம் காதலி தேடி வருகிறார்.. இன்னொரு பக்கம் சம்பந்தமில்லாத பிரச்னைகள் தேடி வருகின்றன.. பிச்சைக்காரன் என்பதை அறிந்து காதலி ஒதுங்க, சொத்து பிரச்சனையில் இவரது பெரியப்பாவும், இன்னொரு பிரச்சனையில் சென்னை ரவுடி ஒருவனும் இவரை கொல்ல துணிகின்றனர்.

இந்த களேபரத்தில் விரதத்தின் கடைசிநாளில் எதிரிகளுடன் நடக்கும் மோதலில் அவரது காதலி காயம்பட்டு உயிருக்கு போராடுகிறார். விரதம் முடியாமல் இருக்கும் சூழலில் தான் இன்னார் என வெளிப்படுத்தினால் அனைத்தும் சுமூகமாக தீரும் என்கிற நிலையில் காதலிக்காக தனது விரதத்தை கைவிட்டாரா.. பிரச்சனைகளை முடித்தாரா.. அவரது அம்மா பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வலுவான அம்மா சென்டிமென்ட் பின்னணியில் பின்னப்பட்டுள்ள கதை என்பதால் கோடீஸ்வரன் ஒருவன் பிச்சைக்காரனாக மாறுவதை நம்மால் எந்த லாஜிக்கும் பார்க்காமல் கதையுடன் எளிதாக ஒன்றமுடிகிறது..

அமைதியான சுபாவம், தாய்க்காக உருகுவது, பிச்சை எடுக்க படிப்படியாக முயற்சிப்பது, காதலை மென்மையாக எதிர்கொள்வது எதிரிகளை பொளந்து கட்டுவது என தனது கையைவிட்டு மீறிப்போகாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் ஆண்டனி.. ஆடி காரில் வந்து பந்தா பண்ணும் நபரை நடு ரோட்டில் வைத்து அவமானப்படுத்துவது, அள்ளிக்கொண்டு போகும் வில்லன் கும்பலை துவம்சம் செய்வது, காதலியாகவே இருந்தாலும் உதவி செய்யும்போது அதை பிச்சையாக கருதி மண்டியிட்டு வாங்குவது என நிறைய இடங்களில் பாஸ்மார்க் வாங்குகிறார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனியின் படங்களில் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் அடுத்து பெரிய லெவலுக்கு போகிறார்களோ இல்லையோ, அவரது படத்திற்கு மட்டும் பெர்பக்ட்டாக பொருந்திவிடுவது தான் மிக மிக ஆச்சர்யம்.. இந்தப்படத்தின் கதாநாயகி சாட்னா டைடஸும் அந்த ரகம் தான்.. யதார்த்தமான லுக்கில், அழகான புன்னகையில், க்யூட்டான சின்னச்சின்ன செய்கைகளில் நம் மனதில் நிற்கிறார்.

இவர்களை தவிர விஜய் ஆண்டனியின் பெரியப்பாவாக வந்து வில்லத்தனம் காட்டும் ‘பாண்டியநாடு’ முத்துராமன், அம்மாவாக வரும் தீபா, நண்பனாக நடித்துள்ள பகவதி பெருமாள், உடன் வரும் பிச்சைகாரர்கள் என பலரும் திரைக்கதையோடு ஒன்றி பயணித்திருக்கிறார்கள்.. விஜய் ஆண்டனியின் இசையில் ‘அம்மா’ பாடல் மனதை உருக்குகிறது.

விஜய் ஆண்டனி பிச்சைக்காரராக மாற தடுமாறுவது யதார்த்தம் தான் என்றாலும் அவரது லுக்கிலும், பிச்சை எடுக்கும் செயலிலும் இன்னும் கொஞ்சம் இயல்புத்தனத்தை கொண்டு வந்திருக்கலாம். அதேபோல ஓரளவு பழக்கம் ஆகவதற்கு முன்பே அவ்ளோ பெரிய சிட்டியில் நாயகன், நாயகி இருவரும் அடிக்கடி ஏதேச்சையாக சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் படு செயற்கை..

பிச்சைக்காரனாக இருந்து பொருளாதாரம் பேசுவது, ஏதாவது ஒரு வேலை பார்த்துட்டுத்தான் இருப்பான்.. பிச்சையா எடுத்துற போறான், என ஆங்காங்கே வசனங்களில் பளிச்சிடுகிறார் இயக்குனர் சசி. நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதையும், தாயின் உயிர் காக்க ஒரு மகன் எந்த அளவுக்கு இறங்குவான் என்பதையும், பிச்சைக்காரர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்பதையும் தனது ஸ்டைலில் போரடிக்காமல் பொழுதுபோக்காக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சசி..

இந்த பிச்சைக்காரன் மனதில் மட்டும் அல்ல வசூலிலும் கோடீஸ்வரன் தான்