“பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” – இயக்குனர் ராம் வாழ்த்து

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம் “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில் “இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா – மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது. என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம், என் மனைவி அனிதா தான் எனக்கு ஊக்கமளிப்பார். நாம் எங்கிருந்து வந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல் போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ செய்யும் வேலையை நிறுத்தாதே, என தைரியம் கொடுப்பார். அவர் கொடுத்த தைரியம் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம். கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.

அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது” என்று உணர்ச்சிகரமாக பேசினார்.

இயக்குநர் ராம் பேசுகையில், “மாரி செல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ் என்பதை விட, மாரி செல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல். கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது,”இந்தப் படத்தை பற்றி பேசுவதிலோ, முக்கியமான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ எனக்கு எந்த பயமும் இப்போது இல்லை. காரணம் ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும் எனக்கு தைரியத்தை தந்திருக்கிறார்கள். முதலில் நான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஜாலியான ஒரு படம் செய்யலாம் என்ற நோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப்பட்ட கதைதான் “பரியேறும் பெருமாள்”. ஆனால், போகப் போக அதன் வடிவமே மாறிப்போனது. சட்டக் கல்லூரி படிக்கும் போது நான் சந்தித்த, கடந்து போன பல மனிதர்களும், சம்பவங்களும் இந்தப் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துப் போயிருக்கிறது. இந்தக் கதையை கேட்டதும், உடனே ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித் அண்ணன். இந்தப் படத்தை நம்மால் மட்டுமே சிறப்பாக எடுத்து முடிக்க முடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராக எனக்களிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது” என்று நெகிழ்வாக பேசினார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்த படத்தில் என்னை தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்த படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர் பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறது. அதை எப்படி உடைப்பது பற்றி மாரி செல்வராஜ் என்னிடம் பேசியது எனக்கு பிடித்தது. உலக சினிமா, பொதுமக்கள் பிடித்தது, நமக்கு பிடித்தது என்று மூன்று விதமாக இருந்தது. அதை அவர் சொன்ன விதம் எனக்கு பிடித்தது.

அவர் வாழ்க்கையில் நடந்ததை சுற்றி படமாக்கி இருக்கிறார். அந்த ஊர் மக்களை அப்படியே உருவாக்கி இருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும். கருப்பி பாடல் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் பார்த்து என்னை பாராட்டினார்கள். மாரி என்ற இயக்குநர் தமிழ் சினிமாவை எப்படி கொண்டுபோவார் என்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதை நீங்கள் உணர்வீர்கள். பாடல் காட்சிகளை பார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் படம் தயாரிக்கும் போது இதுபோன்ற படைப்புகள் கண்டிப்பாக வரும். என்னுடன் வேலை பார்த்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் இம்மாதம்(செப்டம்பர்) 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது