பேரழகி ஐஎஸ்ஓ – விமர்சனம்

எத்தனை வயதானாலும் பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் உள்ள மோகம் குறைவதே இல்லை.. அப்படி வயதான பெண்மணி ஒருவர் அழகு சிகிச்சை மூலம் திடீரென இளம் குமரியாக மாறிவிட்டால்..? அதுவும் தனது பேத்தியின் உருவத்திற்கே மாறிவிட்டால் எப்படி இருக்கும்..? அது தான் இந்தப்படத்தில் ஒன்லைன்

பேத்தி ஷில்பாவின் திருமணத்திற்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என நினைத்து வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியேறுகிறார் பாட்டி சச்சு.. வயதான பெண்களை எல்லாம் சிகிச்சை மூலமாக வாலிபத்திற்கு மீட்டுக் கொண்டுவரும் புராண கால பார்முலா ஒன்று சரவணன் சுப்பையா அன் கோவிடம் கிடைக்கிறது. அவர்கள் சோதனைக்கு முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேறிய சச்சு சிக்குகிறார்.

சிகிச்சையின் முடிவில் சச்சு தனது பேத்தி சில்பாவின் உருவத்திற்கு மாறுகின்றார். தங்கள் பரிசோதனை முயற்சியில் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆனது என்பதை அறிந்துகொள்ள அவரை விளம்பர மாடலாக உலாவர வைத்து சில சோதனைகளை மேற்கொள்கின்றனர்

பாட்டி சச்சுவும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு இளசுகளுக்கு சவால் விடுகிறார் பேத்தி ஷில்பாவின் காதலன் விவேக் இந்த உருவ ஒற்றுமை விவரம் அறியாமல் இரண்டு ஷில்பாக்களிடமும் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுகிறார்

ஒரு கட்டத்தில் ஆராய்ச்சி கூட்டத்திடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும் சச்சுவுக்கு எதிர்பாராத புதிய சிக்கல் ஒன்று உருவாகிறது.. அது என்ன சிக்கல்.? அதிலிருந்து அவர் வெளியே வர முடிந்ததா..? இந்தத் திட்டத்தை தவறாக பயன்படுத்த நினைக்கும் சரவணசுப்பையாவின் எண்ணம் பலித்ததா என்கிற பல கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையே சயின்ஸ் ஃபிக்சன் கதைகளின் அடிநாதம். இந்தப்படத்தில் அப்படி ஒரு கதையை அழகாக பிடித்திருக்கிறார் இயக்குனர் விஜயன்.சி. அதற்கு தோதான கதாபாத்திரங்களாக சச்சுவையும் ஷில்பா மஞ்சுநாத்தையும் தேர்வு செய்தது சரியான முடிவு. பாட்டி பேத்தி ஆக இருவரும் அமர்க்களப்படுத்துகிறார்கள்.

குறிப்பாக நாயகி ஷில்பாவுக்கு இந்த படத்தில் ஏகப்பட்ட வேலை. பாட்டியாக நடிக்க வேண்டும் அதே சமயம் பாட்டியின் இளமைக்கால ஷில்பாவாகவும் நடிக்க வேண்டும் குரலையும் மேனரிசங்க்ளையும் மாற்றி சமாளிக்க வேண்டும். இது அத்தனையும் ஜஸ்ட் லைக் தட் அழகாக சமாளித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.

பாட்டியாக நடித்துள்ள சச்சுவை பார்த்து 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்று சொன்னால் நிச்சயமாக யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு நடிப்பிலும் வசன உச்சரிப்பிலு இன்னும் இளமை துள்ளுகிறது.

பாட்டி பேத்தி என்கிற இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டாலும் தன்னையும் அவ்வப்போது சில காட்சிகளில் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து இருக்கிறார் நாயகன் விவேக். இவரது கதாபாத்திரத்தின் செயல்கள் சில நேரங்களில் எரிச்சலூட்டும் விதமாக இருப்பது கதாபாத்திர வடிவமைப்பு என்றே நாம் சமாதானப்பட்டுக் கொள்வோம். நடிப்பில் இன்னும் கொஞ்சம் செயற்கை தளத்தை குறைத்திருக்கலாம்.

அறிவியலைப் பயன்படுத்தி தவறான முறையில் பணம் சம்பாதிக்க நினைத்தால் என்ன நடக்கும் என்கிற உதாரணமாக சரவணன் சுப்பையா தனது கதாபாத்திரத்தை மிக சரியாக செய்துள்ளார் அவருக்கு உதவியாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் விஜயன்.சி அவ்வப்போது நகைச்சுவையிலும் ஓரளவு கவனம் ஈர்க்கிறார்.

ஷில்பாவின் தந்தையாக வரும் லிவிங்ஸ்டன், நகைக்கடை அதிபராக வரும் ஆர்.சுந்தரராஜன், வெறும் போட்டோ பிரேமில் மட்டுமே காட்சியளித்து தனது பணியை முடித்துக் கொண்ட டெல்லி கணேஷ் என பலரும் தங்களது பங்களிப்பை மிகச் சரியாகவே செய்திருக்கிறார்கள். மேலும் நகைக்கடை அதிபர் சுந்தர்ராஜன் மகனாக வருபவர் அமெச்சூர்தனமான நடிப்பால் நம்மை சோதிக்கிறார்

நவ்ஷாத்தின் ஒளிப்பதிவு கதையின் விறுவிறுப்பை கூட்டுகிறது இசையமைப்பாளர் சார்லஸ் தனா அந்த விறுவிறுப்பை கூட்டும் விதமாக பின்னணி இசை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சயன்ஸ் பிக்ஷன் கதைதான் என்றாலும் அதை சீரியஸாக இல்லாமல் மிகவும் ஜாலியாக காமெடி கலந்து எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் விஜயன் சி

அதே சமயம் அது சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக இல்லாமல் சற்று நாடகத்தனமாக அலட்சியத்துடன் படமாக்கி இருப்பதாகவே நமக்கு தோன்றுகிறது இரண்டு ஷில்பாக்களையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் காட்சிகளை அதிகப்படுத்தி காமெடியில் இன்னும் புகுந்து விளையாடி இருக்கலாமே சார்… இப்படி சின்னச் சின்ன குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் பேரழகி ஐஎஸ்ஓ ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படமே.