பீச்சாங்கை – விமர்சனம்

Peechaankai-Movie

பிக்பாக்கெட் கும்பலில் ஒருவரான ஆர்.எஸ்.கார்த்திக் இடதுகை பிக் பாக்கெட் ஸ்பெஷலிஸ்ட். ஒருமுறை நண்பர்களுடன் மிகப்பெரிய தொகையை பிக்பாக்கெட் அடிக்க, அதனை பறிகொடுத்த அஞ்சலி ராவின் திருமணம் நின்றுவிடுகிறது.. இரக்கப்பட்டு அவரிடம் இந்தப்பணத்தை திருப்பிக்கொடுக்க போக நண்பர்களின் பகையையும் அஞ்சலி ராவின் காதலையும் சம்பாதிக்கிறார் கார்த்திக்..

எதிரிகளுடனான துரத்தலின்போது அடிபடும் அவரது பீச்சாங்கை (இடதுகை) அதற்குப்பின் அவர் சொன்னபடி கேட்க மறுத்து தனது இஷ்டத்திற்கு செயல்படுகிறது.. இதனால் ஒரு பக்கம் அரசியல்வாதிகளின் பகையையும் இன்னொரு பக்கம் காமெடி தாதா பொன்முடியின் எதிர்ப்பையும் சம்பாதிக்கிறார் கார்த்திக்.. கூடவே காதலியின் கோபமும் சேர்ந்துகொள்கிறது..

இந்த சிக்கல்களில் இருந்து கார்த்திக் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

அறிமுக நடிகர் தான் என்றாலும் ஓவர் பில்டப் இல்லாத, அதேசமயம் தனக்கு தோதான கேரக்டரில் ஜமாய்த்திருக்கிறார் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்’ ஜஸ்ட் லைக் தட் நமக்கு தெரிந்த ஒரு இளைஞனை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறார். குறிப்பாக பீச்சாங்கையால் தான் படும் அவஸ்தைகளில் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்..

நாயகி அஞ்சலி ராவுக்கு பாந்தமான முகம் என்றாலும் அழகாக நடிக்கிறார் என்றாலும் வந்துபோகும் நேரம் குறைவே.. எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, கே.எஸ்.ஜி வெங்கடேஷ் ஆகியோர் ஒருபக்கம் அரசியல் வில்லத்தனம் காட்டி டெரர் ஏற்றுகிறார்கள்.. இன்னொரு பக்கம் காமெடி தாதா பொன்முடி அன் கோ பட்டையை கிளப்புகிறார்கள். பொன்முடியிடம் மறைந்துள்ள முழு திறமையும் வெளிப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

அறிமுக இயக்குனர் அசோக் சீரியஸான கதையை காமெடி ப்ளேவரில் தந்திருக்கும் விதம் தான் இந்தப்படத்தை கவனிக்க வைக்கிறது. அதுதான் படத்தின் பிளஸ் பாயிண்ட்டும் கூட.