“பேச்சைவிட செயல்வேகம் அதிகம்” – விஷாலை பாராட்டிய விஜய்

 

முதலில் சின்னதாக ஒரு பிளாஸ்பேக்.. ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்த ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்ற சமயத்தில் அங்கேயுள்ள இரண்டு உள்ளூர் கேபிள் சேனல்களில் அந்த சமயத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமயலறையில்’ ஆகிய படங்களை திருட்டுத்தனமாக ஒளிபரப்புவதாக விஷாலுக்கு தகவல் கிடைத்தது.

அவை இரண்டுமே தனது படங்கள் இல்லை என்றாலும் விஷாலுக்கு திருட்டு விசிடியின் கோர தாண்டவத்தையும் லோக்கல் சேனல்களின் அத்துமீறும் இந்த காட்டு தர்பாரையும் தட்டிக்கேட்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவே, உடனே காரைக்குடியில் உள்ள காவல்நிலையத்தில் இது குறித்து புகார் செய்த்தார்.

அதுமட்டுமல்ல.. அவ்வப்போது திருட்டு விசிடிக்கெதிராக கண்டனக்குரல் எழுப்பியும் வருகிறார். இப்போது தீபாவளிக்கு அவரது ‘பூஜை’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் திருட்டு விசிடி விற்பனை செய்த இரண்டு கடைகளில் சோதனை செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் பூஜை மட்டுமல்லாமல், விஜய்யின் ‘கத்தி’ பட திருட்டு டிவிடிக்களை விற்றதையும் கண்டித்துள்ளார்.

விஷாலின் இந்த செயலை கேள்விப்பட்ட விஜய்’ “விஷாலை நினைத்து பெருமைப்படுகிறேன்.. பேசுவதைவிட செயலில் காண்பிக்கும் அவரது வேகம் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. நாம் ஒன்றிணைந்து விசிடி திருட்டை தடுப்போம்” என விஷாலை பாராட்டியுள்ளார். விஷாலும் விஜய்யின் பாராட்டினால் இன்னும் ஊக்கம் கிடைத்துள்ளதாக பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.