பசங்க-2 – விமர்சனம்

Suriya’s-‘Pasanga-2’
சாதாரண குழந்தைகளை சமாளிப்பதே சிரமம் என்கிறபோது இரண்டு நிமிடம் கூட ஓரிடத்தில் நிற்காமல் துறுதுறுவென இருக்கும் குழந்தைகள் பற்றி சொல்லவும் வேண்டுமா..? மற்றவர்களை விட ஐ.க்யூ லெவல் அதிகமுள்ள ஏ.டி.ஹெச்.டி. என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அட்டென்ஷன் டெபிஷிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்கிற குழந்தைகளின் குறைபாட்டை மையப்படுத்தி இந்தப்படத்தை இன்ச் பை இன்ச் ஆக செதுக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

இந்த குறைபாட்டை பிரதிபலிக்கும் விதமாக பேபி வைஷ்ணவி, நயனா, நிஜேஷ், அபிமன் என நான்கு குழந்தைகளை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடிப்பை வரவழைத்திருக்கும் இயக்குனர் பாண்டிராஜ், இந்தப்படத்தில் செய்த மகத்தான காரியம் குழந்தைகளை எப்படி ஹேண்டில் செய்யவேண்டும் என கற்றுத்தரும் டாக்டராக சூர்யாவை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தது தான்..

ஒவ்வொரு காட்சியிலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளை கட்டுப்படுத்தி அரசாள நினைக்கும் பெற்றோர்களுக்கு படம் முழுவதும் பாஸிடிவ் அதிர்வுகளை கடத்துகிறார் சூர்யா.. அவரது ஒவ்வொரு வசனமும் யதார்த்த வாழ்வில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அறிந்தோ அறியாமலோ அவர்களின் எதிர்காலம் என்கிற பெயரில் திணிக்கும் வன்முறைகளை சுட்டு பொசுக்குகிறது. அழுத்தமான வசனத்தில் தனித்து தெரிகிறார் பாண்டிராஜ்.

வெண்பா டீச்சராக வரும் அமலாபால் ஒவ்வவொரு டீச்சரும் தனக்கான நியாய தர்மங்களை உணர்ந்து வேலைபார்ப்பதன் அவசியத்தை அழகாக உணர்த்தி தனது கேரக்டரை பெருமைப்படுத்தி இருக்கிறார். குழந்தைகளின் பெற்றோர்களாக கார்த்திக்-பிந்துமாதவி, முனீஸ்காந்த்-வித்யா தம்பதியினர், யதார்த்த ஆசாபாசங்கள் கொண்ட, குழந்தைகள் மீது தங்கள் அத்தனை அபிலாஷைகளையும் திணிக்கும் அப்பர் மிடில்கிளாஸ் தம்பதிகளாக மிக சரியான தேர்வு..

முனீஸ்காந்த் லைட்டர்வெய்ன் காமெடியில் பின்னுகிறார். வாவ்..பிந்துமாதவி சைலண்ட் ரியாக்சன் நடிப்பில் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். வித்யாவுக்கும் தமிழ்சினிமாவில் வரும் காலங்களில் நல்ல இடம் ஒன்று உண்டு.. கார்த்திக்கும் அசதுக்கிறார்.

குழந்தைகளாக நடித்திருக்கும் பேபி வைஷ்ணவி, நயனா, நிஜேஷ், அபிமன் இவர்களின் துறுதுறு நடிப்பு அற்புதம். கேமரா முன் எந்தவித பயமுமில்லாமல், பல படங்கள் நடித்தவர்கள்போல் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார்கள் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுபிடித்து வேலை வாங்கியுள்ள பாண்டிராஜ், காம்பெடிஷனில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்குவதை கூட எந்த மாதிரி டீல் பண்ணவேண்டும் என புத்திசாலித்தனமாக சூர்யா மூலம் சொல்லியிருப்பது நச்..

பெற்றோர்கள் தாங்கள் சிறு வயதில் செய்த சேட்டைகளையும் குறும்புகளையும் இன்றும் பேசி பெருமைப்படுகிறார்களே தவிர, தங்களது குழந்தைகளை அப்படி ஒரு உலகத்தில் வாழ அனுமதிப்பதே இல்லை என்பதையும், நகரமயமாதல் அதற்கு முக்கிய காரணம் என்பதையும் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

மொத்தத்தில் பசங்க-2 ஒரு குழந்தைகளுக்கான பொழுதுபோக்கான படம்.. பெற்றோர்களுக்கான அவசியமான பாடம்