“பசங்க-2 என் படம் இல்லை” – மீண்டும் தெளிவுபடுத்திய சூர்யா..!

Pasanga 2
கிறிஸ்துமஸ் ரிலீஸாக, வரும் டிச-24 அன்று பசங்க-2 வெளியாகிறது.. பாண்டிராஜின் இயக்கத்தில் வெளியாகும் இந்தப்படத்தை சூர்யா இணைந்து தயாரித்திருப்பதுடன் தமிழ்நாடன் என்கிற டாக்டர் கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வெண்பா டீச்சர் கேரக்டரில் அமலாபால் நடித்துள்ளார்.

இந்தப்படம் குறித்து சூர்யாவும் இயக்குனர் பாண்டிராஜும் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.. சூர்யா பேசும்போது, “என்னுடைய ரசிகர்கள் சிங்கம்-3, 24 படங்களுக்கு வருவது போன்ற எதிர்பார்ப்புடன் வரவேண்டாம்.. இது என் படம் இல்லை. முழுக்க முழுக்க குழந்தைகள் படம், இயக்குனர் பாண்டிராஜின் படம்” என மீண்டும் ஒருமுறை தெளிவு படுத்தியுள்ளார்.

இந்தப்படம் பண்ணுவதற்கான பொறி எப்படி உருவானது என்பதை இயக்குனர் பாண்டிராஜ் கூறினார், ஒருமுறை பாண்டிராஜின் நண்பர் ஒருவர் தனது குழந்தையை பற்றி பேசும்போது, இதுவரை நாலு ஸ்கூல் மாற்றிவிட்டேன், அதற்காக நான்கு முறை வீடு மாறிவிட்டேன்.. பையன் ஒரு இடத்தில் நிற்கவே மாட்டேன்கிறான்.. டாக்டரிடம் கேட்டால் என்னமோ ஒரு வியாதி பெயரை சொல்கிறார்.. ஒன்னும் புரியலை” என புலம்பினாராம்..

அது என்னவாக இருக்கும் என நூல் பிடித்தபடி ஆராயத்தொடங்கிய பாண்டிராஜ், நகரத்தில் படிக்கும் குழந்தைகள் வாழ்க்கையில் இவ்வளவு ஆச்சர்யங்களும், அதிர்வுகளும், விநோதங்களும் உள்ளதா என வியந்தவர், கிட்டத்தட்ட மூன்று வருட உழைப்புக்குப்பின், அதை பசங்க-2 படமாக மாற்றிவிட்டார்.