‘பரமன் ‘கிடாரி’யாக மாறிய கதை..!

paraman To Kidari - Actor Sasikumar's Travel

’சுப்ரமணியபுரம்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்த திறமையான இயக்குனர், நடிகர், தயாரிப்பாளார் என்கிற முக்கனி தான் சசிகுமார்.‘யாருடா இந்த பரமன்’ என முதல்படத்திலேயே ஆச்சர்யப்பட வைத்தவர், ‘நாடோடிகள்’ படத்தில் காதலர்களுக்கு உதவும் கடவுளாக மாறி இளைஞர்களின் மனதில் எளிதாக குடிபுகுந்தார்.

’சுப்ரமணியபுரம்’ படத்தில் சசியின் மீது ரசிகர்களுக்கு ஆரம்பித்த கிரேஸ் நாடோடிகள்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இன்னும் அதிகமாகியது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் தங்களை காதலுக்கு உதவும் சசிகுமாராக நினைத்து கெத்து காட்ட ஆரம்பித்தார்கள்..

ஒரே படத்தில் ரசிகர்களும் திரையுலகமும் ஏற்றுக்கொள்ளும் கதாநாயகர்கள் அமைவது அரிதிலும் அரிது. அது சசிக்குமாருக்கு எளிதாக கைகூடியது. அதன்பின் திரையுலகில் எந்த விழாக்கள் நடந்தாலும் அதில் 75 சதவீதம் விழாக்களில் சசிகுமாரும் தவறாமல் இடம்பெற்றிருப்பார். அதேபோல சசிகுமார் பேரை சொல்லி அழைக்கும்போதே கீழே இருந்து விசில் பறக்கும்.. பேச ஆரம்பிக்கும்போதும் அது தொடரும்.. அதாவது ‘செண்டர் ஆஃப் தி அட்ராக்‌ஷன்’ என்று சொல்வார்களே.. சசிகுமாருக்கு அது நன்றாகவே பொருந்தியது. அவரால் எளிதாக ஏ, பி அன்ட் சி சென்டர்களில் நுழைய முடிந்தது..

தொடர்ந்து வெளியான ‘சுந்தரபாண்டியன்’ ‘குட்டிப்புலி’ ஆகிய படங்கள் சசிகுமாரின் கிராமத்து நாயகன் இமேஜை தூக்கிப்பிடித்தன. பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடிப்பில் புதிய பாதையை தொட்ட சசிகுமாருக்கு அந்த சமயத்தில் தான் ‘கிடாரி’ கதையுடன் அறிமுகமானார் இயக்குனர் பிரசாத் முருகேசன்..

அந்த கதையை கேட்டதுமே தானே மீண்டும் டைரக்சனில் இறங்கி விடலாமா என்றுகூட நினைத்தாராம் சசிகுமார். அந்த அளவுக்கு ‘கிடாரி’ கதை அவரை ரொம்பவே ஈர்த்துவிட்டது.. இந்தப்படத்தில் கதாநாயகி நிகிலா விமல், இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.. வெற்றிவேல் படத்தில் அழுத கண்களும் வாடிய முகமுமாக காட்சி தந்தவர், இந்தப்படத்தில் அதற்கு நேரெதிரான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..

ஒதுங்கி ஒதுங்கிப்போகும் கிடாரியான சசிகுமாரை, விரட்டி விரட்டி காதலிக்கும் வெள்ளாட்டுக்குட்டியாக துறுதுறு நடிப்பில் கலக்கியுள்ளாராம் நிகிலா விமல். இந்தப்படத்தின் மூலம் தமிழில் அழுத்தமான ஒரு தடத்தை பதித்து நிலையான ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். ராஜதந்திரம்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்த தர்புகா சிவா இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார். வரும் செப்டம்பர்-2ஆம் தேதி வெளியாகும் ‘கிடாரி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு கிராமத்து விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.