பாபநாசம் – விமர்சனம்

மலையாளம் மட்டும் மட்டும் அல்லாமல், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக்காகி வசூலை அள்ளிய ‘த்ரிஷ்யம்’, தற்போது தமிழிலும் தன்னை நிரூபிக்க ‘பாபநாசம்’ ஆக களம் இறங்கியிருக்கிறது. நினைத்தை சாதித்ததா என்பதை பார்க்கலாம்..

லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டரான கமல், பாபநாசத்தில் இயற்கை எழில் சூழ ஒரு வீட்டில் தன் மனைவி கௌதமியுடனும் தன் இரண்டு பெண்களுடனும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ப்ளஸ்டூ படிக்கும் அவரின் மகளான நிவேதாவை கேம்ப் போன இடத்தில் இன்னொரு மாணவனான வருண், அவள் உடை மாற்றும் போது தன் செல்ஃபோன் கேமராவில் வீடியோ எடுத்துவிடுகிறான்.

நிவேதாவின் ஊருக்கு வந்து அதைகாட்டி அவளை மிரட்டி, தன் ஆசைக்கு இணங்க வைக்கும் போது, கௌதமிக்கு விஷயம் தெரிந்து ஏற்படும் கைகலப்பில் நிவேதா வருணை எதிர்பாராதவிதமாக தாக்க, வருண் இறந்து போகிறான். செய்வதறியாது திகைக்கும் அம்மாவும் மகளும் வருணை அவர்கள் வீட்டு தோட்ட்த்தில் புதைத்துவிடுகின்றனர்.

காலையில் வீட்டிற்கு வரும் கமலுக்கு, நடந்த விஷயம் தெரியவர, தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்குகிறார் கமல். சினிமா பிரியரான கமல், தான் பார்த்த படங்களின் உதவியால், கொலை நடந்த எந்த தடயமும், வருண் பற்றிய தடயமும் போலீஸுக்கு கிடைக்கக்கூடாது என்று எல்லாவற்றையும் சாமர்த்தியமாக அழிக்கிறார். அதில் ஒரு முயற்சியின்போது ஏதேச்சையாக கான்ஸ்டபிளான கலாபவன் மணி கண்களில், அவருக்கே தெரியாமல் பட்டுவிடுகிறார்.

வருணின் அம்மா ஆஷா சரத் ஐ.ஜி என்பதால் மகனை தேட, ரகசியமாக அதேசமயம் தீவிரமாக போலீஸ் துறையை முடுக்கி விடுகிறார். கலாபவன் மணி கொடுக்கும் க்ளூவை வைத்து, கமல் குடும்பத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறது போலீஸ்.. விசாரணையில் என்ன நடந்தது, அந்தக்குடும்பம் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்ததா என்பது மிரள வைக்கும் திக் திக் கிளைமாக்ஸ்.

வேட்டி கட்டிய, சாதாரண தமிழக கிரமாத்து மனிதனாக நீண்ட நாட்கள் கழித்து கமலை பார்க்க முடிவதே பெரிய ஆசுவாசம். மனுஷன் இந்த வயதிலும் ரொமான்ஸை கண்ணில் தேக்கி வைத்திருக்கிறார். குழந்தைகளை அரவணைத்து, போலீஸிடம் எப்படி பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை நுணுக்கமாக சொல்லித்தரும் ஆசானாக அன்பான தந்தையாக எதிலுமே குறைவைக்கவில்லை கமல்.

அதேசமயம் போலீசார் தன்னையும் தன குடும்பத்தையும் அடித்து நொறுக்கும்போது, எங்கேயுமே துளி கூட ஹீரோயிசம் தலைதூக்கிவிடாமல், சாதாரண விசாரணை குற்றவாளியின் நிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். நிச்சயமாக பிரமிக்க வைக்கும் அளவுக்கு கமலின் கேரக்டர் அமைந்துள்ளது என உறுதியாக சொல்லலாம்.

கமலுக்கு அடுத்து படத்தில் தனது இருப்பை அதிரடியாக நிலை நாட்டியிருப்பது ஐ.ஜியாக வரும் ஆஷா சரத். என்ன ஒரு பர்ஃபாமென்ஸ்! என்ன ஒரு மிடுக்கு!. தன் மகன் காணாமல் போன தவிப்பு, கமல் சொல்லும் அத்தனை கதைகளையும் நம்பாமல் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, கமலை கடைசி நிமிடம் வரை மிரட்டி வெளுத்துக்கட்டி இருக்கிறார்.

கான்ஸ்டபிள் பெருமாளாக வரும் கலாபவன் மணி.. சரியான தேர்வு.. பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு போன இடத்தில் கமலை காருக்குள் பார்த்துவிட்டு, அந்த ஒரு சின்ன க்ளூவை வைத்தே அவரை கடைசி வரை டார்ச்சர் செய்துகொண்டே இருக்கிறார். அவருக்கும் கமலுக்குமான முந்தைய உரசல், இதற்கு இன்னும் வலு சேர்க்கிறது. பார்க்கும் நமக்கே அவரை ஓங்கி ஒரு அறை அறையலாமா என்று தோன்றுகிறது. வெல்டன் மணி..!

கமலின் மனைவியாக நீண்ட நாட்கள் கழித்து என்ட்ரி கொடுத்திருக்கும் கௌதமி, குடும்பத்தலைவியாக சரியான தேர்வு.. போலீஸ் விசாரணையில் கௌதமி ஒரு வார்த்தையை உளறிவிட, ஆனால் அடுத்த நொடியே கமல் சமாளிக்கும் இடம் வாவ்.. கிளாஸ்.. மகள்களான நிவேதா தாமசும் எஸ்தரும் விசாரணை காட்சிகளில் கைதட்டலை அள்ளுகிறார்கள்.

இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ், கமலை டார்ச்சரும் செய்யாத, ஆனால் அவர் சொல்வதையும் நம்பாத உண்மையான போலீஸ் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். கமலின் நட்பு வட்டாரங்களாக, மாமனாராக டெல்லி கணேஷ், டீக்கடை பாயாக எம்.எஸ்.,பாஸ்கர், ஏட்டையாவாக இளவரசு, கண்டக்டராக சார்லி, ஹோட்டல் முதலாளியாக வையாபுரி, ஆஷா சரத்தின் கணவராக ஆனந்த் மகாதேவன் என அனைவரும் கமலுக்கு பக்காவாக ஒத்துழைப்பு தந்திருக்கிறார்கள்.

சுஜித் வாசுதேவின் கேமரா, பாபநாசம் பகுதிக்குள் நாமும் வசிக்கும் உணர்வை தந்திருக்கிறது. பாடல்களில் ஜஸ்ட் லைக் தட் விட்டுவிட்ட ஜிப்ரான், பின்னணி இசையில் மொத்த திகிலையும் கொட்டி, இடைவேளைக்குப்பின் நம்மை இருக்கை நுனியிலேயே அமரவைக்கிறார்.

புது போலீஸ் ஸ்டேஷன் கட்டுகிறார்கள் என்பதை முதல் காட்சியில் இருந்தே சாதாரணமாக சொல்லிவிட்டு, மிக முக்கியமான டிவிஸ்டை அங்கே கொண்டுபோய் வைத்திருப்பதுதான் இந்தப்படத்தின் ஹைலைட். கமலின் ஆபீஸ் ஃபோன் மழை சமயத்தில் வேலை செய்யாதது, கமல் தோண்டும் குழி, தியேட்டர் புரஜக்சன் ரூம், பஸ் டிக்கெட், ஹோட்டல் டிக்கெட், சர்ச்சில் தியானம் என அத்தனை காட்சிகளுக்கும் டீட்டெய்லிங் கொடுத்திருப்பது பிரமிக்க வைத்திருக்கிறது.

மலையாள ஒரிஜினலான ‘த்ரிஷ்யம்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இந்தப்படத்தையும் இயக்கியிருப்பது தான் மிகப்பெரிய ப்ளஸ். வெறும் நாலாவது மட்டுமே படித்த ஒருவன், எப்படி அத்தனை புத்திசாலி போலீஸ் கூட்டத்தையும் தன் கட்டுக்கதைகளால் நம்ப வைக்கிறான் என்பதுதான் கை வலிக்க வலிக்க கை தட்ட வைக்கும் திரைக்கதை. ஒரு சூப்பர்ஹிட் படத்தின் மூலம் தமிழுக்கு வருகை தந்திருக்கும் இந்த படைப்பாளிக்கு ஒரு வெல்கம் பொக்கே கொடுத்து வரவேற்கலாம்..