பாண்டியோட கலாட்டா தாங்கல – விமர்சனம்

paandiyoda-galatta-thaangala-review
பேய்க்கதைகளை கூறு போட்டு விற்கும் இந்த சீசனில் காமெடி பிளேவருடன் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள படம் தான் இந்த வாரம் வெளியாகியுள்ள ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’..

இமான் அண்ணாச்சிக்கு சொந்தமான மேன்ஷனில் பொம்மை விற்கும் நிதின் சத்யா, பிக்பாக்கெட் திருடன் யோகிபாபு, சினிமா நடிகரான சிங்கம்புலி, வாட்ச்மேனான மயில்சாமி உள்ளிட்ட பலரும் தங்கியுள்ளனர்.. அந்த மேன்சனை விற்க இமான் அண்ணாச்சி முடிவுசெய்யும்போது, அனைவரும் அவரிடம் கெஞ்சி, வாடகை பாக்கி முழுவதையும் தந்துவிடுவதாக இரண்டு மாத கால அவகாசம் வாங்குகின்றனர்.

இந்த நிலையில் வாட்ச்மேன் மயில்சாமி (பாண்டி இவர்தான்) குடித்துவிட்டு போதையில் கட்டடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்து இறக்கிறார்.. நிறைவேறாத ஆசையுடன் செத்துப்போனதால் ஆவியாகி அந்த மேன்சனுக்குள் சுத்தி அனைவரிடமும் கலாட்டா செய்கிறார்.. இவரை பிடித்து அடைக்க மந்திரவாதி மனோபாலா முயற்சி செய்ய, அவரிடமிருந்து தானும் தப்பித்து அடைபட்டுக்கிடக்கும் மற்ற ஆவிகளையும் விடுவிக்கிறார்.

ஒரு ஆவிக்கே தாங்காத மேன்சன், இத்தனை ஆவிகளை எப்படி சமாளிக்கிறது.. மயில்சாமியின் ஆவி வெறும் கலாட்டவுடன் நின்றதா, இல்லை இந்த மேன்சன் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வும் கண்டதா என்பதே மீதிக்கதை..!

நிதின் சத்யா மாதிரி ஒரு சின்ன ஹீரோ, சிங்கம் புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு உள்ளிட்ட மினிமம் கியாரண்டி நகைச்சுவை நடிகர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு காமெடி மசாலா அரைக்க முயன்று இருக்கிறார் இயக்குனர் எஸ்.டி.குணசேகரன்.. படத்தின் ஹீரோ என நிதின் சத்யா பேர் டைட்டிலில் முதலில் வந்தாலும் உண்மையான ஹீரோ என்னவோ மயில்சாமி தான்.. ஆனால் இடைவேளைக்கு முன்பே அவர் இறந்துபோனாலும்கூட, படம் முழுதும் ஆவியாக வந்து அவர் பண்ணும் கலாட்டக்கள் தான் முழுப்படமும்..

சிங்கம்புலியின் வழக்கமான ஹை பிட்ச் கத்தல் காமெடி, மந்திரவாதி மனோபாலாவின் உதார், என சில ரெடிமேட் ஐட்டங்கள் இதில் இருந்தாலும், இமான் அண்ணாச்சியின் காமெடி கலந்த வில்லத்தனம், யோகிபாபுவின் டைமிங் கவுண்டர் டயலாக், கதாநாயகி ரக்சா ராஜின் அழகுமுகம் என சில ரசிக்கவைக்கும் அம்சங்களும் இருக்கின்றன.

ஆவிகள் அனைத்தும் பொம்மைகள் உருவத்தில் வருவது நல்ல கற்பனை.. அதேபோல மனோபாலா ஆவிகளை பிடித்து கண்ணாடிக்குடுவையில் அடைத்து வைப்பதும், அவைகள் மைண்ட் வாய்ஸில் தவிப்பதும் குறும்பான யோசனைதான். ஆனால் முழுப்படத்துக்கும் இதுமட்டும் பத்தாதே. சீரியஸ் இல்லாத காமெடியான ஆவிக்கதையை உருவாக்க மெனக்கெட்ட இயக்குனர், உண்மையிலேயே இன்னும் சீரியசாகவே கதை விவாதத்தில் மெனக்கெட்டிருக்கலாம்.