பண்டிகை – விமர்சனம்

pandigai

சட்ட விரோதமாக, இரு வீரர்களின் மீதும் பணத்தைக் கட்டி போட்டிகளை நடத்தி பணம் சம்பாதிக்கிறது ஒரு குரூப். இதில், வெளியில் ஹோட்டலில் வேலை பார்த்துவிட்டு இன்னொருவரின் பிரச்சனைக்காக, சூதாட்ட சண்டையில் ஈடுபடும் நாயகன், சூதாட்டம் என்றைக்காவது பலனளிக்கும் என்ற நம்பிக்கையில் வீட்டையே அடமானம் வைத்து விளையாடும் நாயகனின் நண்பன், பணப் பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்காக நடக்கும் ஒரு கொள்ளை முயற்சி, இதற்கிடையே ஒரு காதல் என கலந்துகட்டி பண்டிகையாக கொண்டாடி இருக்கிறார்கள்.

பலசாலிகளை மோதவிட்டு அதில் பந்தயம் கட்டி பணம் குவிக்கும் ‘ஃபைட்டிங் கிளப்’ சூதாட்டம் என்று திரைக்கதையை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஃபெரோஸ். சூதாட்டத்தில் ஒருவர் எப்படி சிக்குகிறார்? அவரை உள்ளே கொண்டுவர எதிரிகள் வகுக்கும் வியூகம், அதில் புழங்கும் பண பேரம் உள்ளிட்டவை தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப்படத்தில் மீட்டரை தாண்டாமல் கேரக்டருக்கும், கதைக்குமான நடிப்பை வெளிப்படுத்திய விதத்தில் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்திக்கொண்டுள்ளார் நடிகர் கிருஷ்ணா. அவருக்கு இணையான வேடத்தில் கலக்கியிருக்கிறார் சித்தப்பு சரவணன். ஒவ்வொருமுறை பணம் பேட்டிங் கட்டும்போதும் அவரது தவிப்பு நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

விறுவிறுப்பான ஆக்சன் படத்தில் ஆனந்திக்கு அளவான நேரமே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார் ஆனந்தி. தாதா கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் கச்சிதம். கிருஷ்ணாவுடன் மோதும் விக்டர், மாலிக், முந்திரியாக வரும் நிதின் சத்யா, கிளைமாக்ஸில் மோதும் இரட்டையர்கள் என அனைவரும் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர். கருணாஸ் ஏமாற்றம் தருகிறார். ஆர்.ஹெச் விக்ரமின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது. படத்தில் வன்முறை, ரத்த காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஒரு ஹீரோவாக கிருஷ்ணாவுக்கும், ஒரு அறிமுக இயக்குனராக பெரோஸுக்கும் ஒரு தயாரிப்பாளராக விஜயலட்சுமிக்கும் இது ஒரு வெற்றிப்படமே.