ஒருநாள் கூத்து – விமர்சனம்

Oru-Naal-Koothu-riview
கல்யாணம் என்பது ஒருநாள் கூத்து.. ஆனால் அதற்குள் தான் எத்தனை பிரச்சனைகள், சஞ்சலங்கள்.. ஒரு கல்யாணம் நடந்தேறும் வரை எதுவும் நம் கையில் இல்லை.. எதுவும் நிச்சயமும் இல்லை என்பதை சொல்லவந்திருக்கும் படம் தான் இந்த ‘ஒருநாள் கூத்து’..

ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் கூட மனதளவில் தாழ்வு மனப்பான்மை கொண்ட கிராமத்து இளைஞன் தான் அட்டகத்தி தினேஷ். உடன் வேலைபார்க்கும் நிவேதா பெத்துராஜை எப்படியோ காதலித்தும் விடுகிறார்.. ஆனால் திருமண பேச்சு வரும்போது மட்டும் ‘இன்னும் செட்டில் ஆகலை ரெண்டு வருஷம் வெயிட் பண்ணு’ என ஜகா வாங்குகிறார். அப்படியும் ஒருகட்டத்தில் நிவேதாவின் தந்தையை சந்திக்க, அவரோ நாகரிகமாக தினேஷை அவமானப்படுத்துகிறார்.. நிவேதாவுக்கு வேறு மாப்பிள்ளையும் பார்க்கிறார்.

சூர்யன் எப்.எம்மில் ஆர்ஜேவாக பணிபுரியும் ரித்விகாவுக்கு அவரது அண்ணன் கருணாகரன், பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் எல்லாமே தட்டிப்போகிறது. இறுதியில் கார் கம்பெனியில் வேலை பார்க்கும் வரன் வந்து, நிச்சயமெல்லாம் முடிந்தபின் இந்தப்பெண் வேணாம் என்கிறார் மாப்பிள்ளை.. ரித்விகாவின் சூழல் உடன் பணிபுரியும் சக ஆர்ஜேவான ரமேஷ் திலக்கின் மீது காதலை உருவாக்குகிறது..

தஞ்சை மண்ணை சேர்ந்த வாத்தியார் நாகிநீடுவின் மகள் மியா ஜார்ஜ்.. பெரிய பெண்ணுக்கு வசதியான இடத்தில் திருமணம் செய்துவைத்த நாகிநீடு, மியாவுக்கும் அதேபோல வரன் பார்ப்பதாக சொல்லி வரும் வரனை எல்லாம் தட்டிக்கழிக்கிறார். இப்படியே ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில் வசதியான வீட்டில் இருந்து பெண் பார்க்க வந்த ஒரு மாப்பிள்ளை, மியாவை பிடித்துப்போய் சென்னைக்கு வந்துவிடு திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறார். அதை நம்பி மியாவும் சென்னைக்கு பஸ் ஏறுகிறார்..

இப்படி மூன்று பெண்களின் வாழ்க்கையிலும் திருமணம் என்கிற நிகழ்வு என்னென மாற்றங்களை, ஆச்சர்யங்களை, வருத்தங்களை கொண்டு வருகிறது என்பதை ஒருநாள் கூத்து’ ஆக்கியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ்.

அட்டகத்தி தினேஷ், இன்னும் பழைய பாணி நடிப்பில் இருந்து வெளிவரவேயில்லை.. இருந்தாலும் வசதியற்ற வீட்டு பையன் வசதியான பெண்ணை காதலிக்கும்போது இருக்கும் துணிவு, கரம் பிடிக்க தயங்கும் தாழ்வு மனப்பான்மை இரண்டையும் சரியாக பிரதிபலித்திருக்கிறார்.. ரித்விகாவின் அண்ணனாக வரும் கருணாகரன் தங்கையின் கல்யாணத்துக்காக சிரமப்படும் குணச்சித்திர பாத்திரமாக மிளிர்கிறார்..

மூன்று கதாநாயாகிகளில் மியா அழகுப்பதுமை.. அதிக வசனம் எதுவும் இல்லாமல் கண்களாலும் உடல் மொழியாலும் திருமண சோகத்தை வெளிப்படுத்தி மனதை அள்ளுகிறார். ஆர்ஜேவாக வரும் ரித்விகா படபடவென பொரிவதும், நிச்சயித்த மாப்பிள்ளை திடீரென தன்னை வேண்டாம் என சொல்லும்போதும் நிலைகுலைவதுமாக நடுத்தர வர்க்கத்து பெண்களை நகலெடுத்துள்ளார். புதுமுகம் நிவேதா பெத்துராஜ் தமிழுக்கு ஒரு அழகிய புது வரவு.. நடிப்பும் நிறைவாக இருக்கிறது..

தினேஷ் வரும் காட்சிகளில் எல்லாம் உடன் வரும் பாலசரவணனின் காமெடிதான் ஓரளவு ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. சார்லி, நிவேதாவின் தந்தை, மியா, ரித்விகாவிற்கு நிச்சயித்த மாப்பிள்ளைகள் என பல துணை கதாபாத்திரங்களும் மனதை தொடுகிறார்கள்.. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் சுகம்.. குறிப்பாக ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ரிப்பீட் ரகம்.

மியாவின் தந்தை நாகிநீடு தனது மகள் திருமணத்தை அவ்வளவு நாள் தள்ளிப்போடுவதற்கு, வரும் வரன்களை எல்லாம் தட்டிக்கழிப்பதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை… திருமணத்திற்கு ஒரு பெண் இருந்தால் போதும் என பெண் கிடைக்காமல் ஆண்கள் தவிக்கும் இன்றைய சூழலில் மியா மாதிரி பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று சொல்லும் டைரக்டர் இன்னும் எண்பதுகளை விட்டே வெளியே வரவில்லையோ என தோன்றுகிறது.. நெகடிவ் க்ளைமாக்ஸை மட்டும் தவிர்த்திருந்தால் கூத்து இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.